இந்தியா

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.500 கோடி நிவாரணத் தொகை:  பிரதமர் மோடி அறிவிப்பு

DIN

உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு முதல்கட்டமாக ரூ.500 கோடி நிவாரணத் தொகையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

உம்பன் சூறாவளிப் புயல் காரணமாக ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி விமானம் மூலம் இன்று பார்வையிட்டார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர்கள் பாபுல் சுப்ரியா, பிரதாப் சந்திரா சாரங்கி, தேவஸ்ரீ சௌத்ரி ஆகியோரும் அவருடன் சென்றிருந்தனர். ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் சென்றிருந்தனர். 

சூறாவளிப் புயலால் ஏற்பட்ட சேதங்களை பாட்ரக் மற்றும் பாலசோர் பகுதிகளில் விமானத்தில் இருந்து பிரதமர் பார்வையிட்டார். பாதிப்புகளை நேரில் பார்த்தறிந்த பிறகு, புவனேஸ்வரில் மாநில மூத்த அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு சென்று சேதாரத்தை மதிப்பிடும் காலம் வரையில், ஒடிசா மாநிலத்திற்கு ரூ.500 கோடி நிதி உதவி அளிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்தார்.

சிரமமான இந்த நேரத்தில் மாநில அரசுகளுடன் மத்திய அரசு தோள் கொடுத்து செயல்படும் என்று பிரதமர் உறுதியளித்தார். சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டமைப்புகளை சீர் செய்து, புதுப்பிக்கத் தேவையான, சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றார் அவர். இறந்தவர்களுக்காக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், ஒடிசா மக்களுடன் துணை நிற்பதாகக் கூறினார். 

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். முன்னதாக புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தையும் இன்று பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிவாரணம் அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

SCROLL FOR NEXT