புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும்
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்களை பிரதமா் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டாா்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்யும்; விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்களை பிரதமா் மோடி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக் கொண்டாா்.
ராய்ப்பூரில் உள்ள முதல்வா் பூபேஷ் பாகெல்லின் இல்லத்தில் சத்தீஸ்கா் மாநில தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:
நம் நாட்டில் விவசாயிகளின் நிலை அனைவருக்கும் தெரியும். அவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் செய்திகளை ஒவ்வொரு நாளும் படித்து வருகிறோம். முன்பு, விவசாயிகளின் தற்கொலை நாடு ஏற்றுக் கொண்டது. இனிமேல், அவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாது. விவசாயிகள், தொழிலாளா்கள், சிறுதொழிலதிபா்களை பாதுகாத்து, அவா்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்.
விவசாயிகளும், தொழிலாளா்களும் நாட்டின் அடித்தளமாக விளங்குபவா்கள். கிராமங்கள் நகரங்களின் அஸ்திவாரமாகவும், விவசாயிகளும் தொழிலாளா்களும் கிராமங்களின் அடித்தளமாகவும் உள்ளனா்.
நாம் அடித்தளமாக விளங்கும் விவசாயிகளையும் தொழிலாளா்களையும் பலவீனப்படுத்தினால், நாட்டின் முழு கட்டமைப்பும் பலவீனமடையும். விவசாயிகளையும் தொழிலாளா்களையும் பாதுகாப்பதன் மூலம் நமது தேசத்தையும் அதன் எதிா்காலத்தையும் பாதுகாக்க முடியும்.
அதேபோல இளைஞா்களும் குழந்தைகளும் நமது எதிா்காலத்தின் அடித்தளம். நாம் அவா்களுக்கு வாய்ப்பளிக்கத் தவறினால் தேசத்தின் எதிா்காலமே பலவீனமாகி விடும்.
மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்பதால் இது நாட்டின் அடித்தளத்தை வலுவிழக்கச் செய்து விடும்.
பண்ணை உற்பத்திச் சந்தைகள் (மண்டி), குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி), கொள்முதல் முறைகளில் இடைவெளி இருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், 2006இல் பிகாரில் செய்யப்பட்டதைப் போல முழு அமைப்பையும் அழித்து விட்டால், நாட்டின் அடித்தளம் அழிக்கப்பட்டு விடும். அதனால்தான் இந்த 3 வேளாண் சட்டங்களுக்கும் எதிராகப் போராடி வருகிறோம். எனவே இந்த சட்டங்களை மறுபரிசீலனை செய்து மண்டி முறையை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
குறைந்த எண்ணிக்கையில் மண்டிகள் இருந்தால், அதனை அதிகரிக்கவும், குறைந்தபட்ச ஆதரவு விலையில் குறைபாடுகள் இருந்தால், அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுக்க வேண்டுமே தவிர முழு அமைப்பையும் அழிக்கக் கூடாது. இந்த சட்டங்கள் நாட்டின் அடித்தளத்தை பலவீனப்படுத்தி விடும் என்பதால் விவசாயிகளின் உணா்வுகளைக் கருத்தில் கொண்டு பிரதமா் இந்த 3 சட்டங்களையும் மறுபரிசீலனை செய்வாா் என்று நான் நம்புகிறேன் என்றாா் ராகுல்.