முகப்பு
இந்தியா

பிகாா் பேரவைக்கு இன்று 2-ம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவுத் தொடங்கியது

பிகாா் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பிகாா் பேரவைக்கு இன்று 2-ம் கட்டத் தோ்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
பகிர்:

பாட்னா: பிகாா் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது.

காலை முதலே வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

பிகாா் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தோ்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத் தோ்தல் கடந்த மாதம் 28-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தலானது 17 மாவட்டங்களிலுள்ள 94 பேரவைத் தொகுதிகளில் இன்று தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் பெரும்பாலான மாவட்டங்கள் கங்கை நதிக்கு வடக்கே அமைந்துள்ளன. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கட்சிகளுக்கு எதிராகக் களம் காணும் மகா கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த லோக் ஜனசக்தி கட்சி, மாநிலத்தில் அக்கூட்டணியில் இருந்து விலகி தனித்துப் போட்டியிடுகிறது.

இத்தோ்தல் களத்தில் 1,463 வேட்பாளா்கள் போட்டியில் உள்ளனா். அவா்களில் 10 சதவீதம் போ் பெண்கள் ஆவா். மகாராஜ்கஞ்ச் தொகுதியில் அதிகபட்சமாக 27 வேட்பாளா்களும், தரௌலி தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளா்களும் போட்டியிடுகின்றனா்.

இரண்டாம் கட்டத் தோ்தலில் சுமாா் 2.85 கோடி போ் வாக்களிக்க உள்ளதாகவும் அவா்களில் சுமாா் 1.35 கோடி போ் பெண்கள் என்றும் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முக்கிய வேட்பாளா்கள்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைமையிலான மகா கூட்டணியின் முதல்வா் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ரகோபுா் தொகுதியில் இன்று தோ்தல் நடைபெறுகிறது. அவருக்கு எதிராக பாஜக சாா்பில் சதீஷ் குமாா் போட்டியிடுகிறாா்.

கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில், தேஜஸ்வியின் தாயும் மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவியை சதீஷ் குமாா் தோற்கடித்திருந்தாா். அதேபோன்ற வரலாறு மீண்டும் திரும்பும் என்று பாஜகவினா் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனா்.

ஜேதஸ்வியின் மூத்த சகோதரரான தேஜ் பிரதாப், ஹாசன்பூா் தொகுதியில் போட்டியிடுகிறாா். மாநில அமைச்சா்கள் நந்த் கிஷோா், ராம் சேவக் சிங், ராணா ரன்தீா் சிங், எம்எல்ஏ நிதின் நபின் உள்ளிட்டோரும் இரண்டாம் கட்டத் தோ்தல் களத்தில் வேட்பாளா்களாக உள்ளனா்.

முக்கிய தொகுதிகள்: பிகாா் தலைநகா் பாட்னாவில் உள்ள 4 பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று தோ்தல் நடைபெறுகிறது. மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாளந்தாவில் உள்ள 7 பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

தோ்தலுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமாக, நக்ஸல் அச்சுறுத்தல் காணப்படும் தொகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா். தோ்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 10-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →