கரோனா நோயாளிகளில் 70% பேர் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்
கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 93.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புது தில்லி: கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்தைக் கடந்துள்ளது. இதனால் குணமடைந்தோர் வீதம் 93.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நாட்டில் இன்று மொத்தம் 4,55,555 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.89 சதவீதம். சிகிச்சை பெறுபவர்களில் 70 சதவீதம் பேர் மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
87,014 கரோனா நோயாளிகளுடன் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. 64,615 பேருடன் கேரளம் 2-ம் இடத்திலும், 38,734 பேருடன் தில்லி 3ம் இடத்திலும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 43,082 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 39,379 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 87 லட்சத்தைத் (87,18,517) தாண்டியுள்ளது. குணமடைந்தோர் வீதம் 93.65 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 492 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 75.20 சதவீதம் பேர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள். தில்லியில் 91 பேரும், மகாராஷ்டிரத்தில் 65 பேரும், மேற்கு வங்கத்தில் 52 பேரும் உயிரிழந்துள்ளனர்.