ராஜ்கோட் கரோனா மருத்துவமனையில் தீ விபத்து: ராகுல் காந்தி கண்டனம்
சம்பவத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் இன்று அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து பெருந்துயரத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்கோட்டில் உள்ள சிவானந்த் கரோனா மருத்துவமனையில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, இந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
Advertisement
இது குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் ராகுல், ராஜ்கோட்டில் கரோனா மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்றதொரு தீ விபத்து ஏற்கெனவே ஆமதாபாத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நேரிட்டது, இந்த தீ விபத்து குறித்து குஜராத் மாநில அரசு விசாரணை நடத்த வேண்டும், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் அந்த மருத்துவமனையில் மொத்தம் 33 கரோனா நோயாளிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கு தீ பரவியதில் 5 பேர் பலியாகினர். 28 கரோனா நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.