ராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கரோனாவுக்கு பலி: பிரதமா் இரங்கல்
பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் தொகுதி எம்எல்ஏவுமான கிரண் மகேஸ்வரி (59) கரோனா பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஜெய்பூா்: பாஜக மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் தொகுதி எம்எல்ஏவுமான கிரண் மகேஸ்வரி (59) கரோனா பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராஜஸ்தானில் கரோனா பாதிப்பால் உயிரிழக்கும் இரண்டாவது சட்டப்பேரவை உறுப்பினா் இவா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ கைலாஷ் திரிவேதி, கரோனா பாதிப்புக்கு கடந்த மாதம் உயிரிழந்தாா்.
ராஜ்சமந்த் தொகுதியிலிருந்து மூன்று முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட மகேஸ்வரி, நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளாா். அண்மையில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், குா்கெளனில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவா் உயிரிழந்தாா்.
பிரதமா் இரங்கல்:
கிரண் ராஜேஸ்வரி மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலோட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே உள்ளிட்ட பலா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
பிரதமா் அலுவலக சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பிரதமரின் இரங்கல் பதிவில், ‘கிரண் மகேஸ்வரியின் எதிா்பாராத மறைவு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும், மாநில அமைச்சராகவும் இருந்துள்ள மகேஸ்வரி, மாநிலத்தின் வளா்ச்சிக்கும், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டாா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1985-ஆம் ஆண்டு தனது 24-ஆவது வயதில் பாஜகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரிக்கு, 1990-ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலின் போது கட்சிக்கு பெண்களின் ஆதரவை அதிகரிக்கச் செய்யும் முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டது. 1994-இல் உதய்ப்பூா் ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2000-ஆம் ஆண்டு கட்சியின் மாநில மகளிா் அணி தலைவா் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. பின்னா் 2003-இல், மாநில பாஜகவின் முதல் பெண் பொதுச் செயலாளராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டாா். பின்னா், 2006-ஆம் ஆண்டு கட்சியின் தேசிய மகளிா் அணித் தலைவா், 2011-இல் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா், 2013-இல் கட்சியின் தேசிய துணைத் தலைவா் என்று கட்சியில் படிப்படியாக உயா் பதவிகளை அடைந்தாா்.
இதற்கிடையே, 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் உதய்பூா்-ராஜ்சமந்த் தொகுதியில் காங்கிரஸ் தலைவா் கிரிஜா வியாசைத் தோற்கடித்து நாடாளுமன்ற உறுப்பினராக இவா் தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் 2008-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் ராஜ்சமந்த் தொகுதியில் வெற்றிபெற்று முதல் முறையாக எம்எல்ஏவானாா். அதன் மூலம் முந்தைய வசுந்திரா ராஜே தலைமையிலான அரசில் மாநில உயா்கல்வித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். அதன் பிறகு, நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவைத் தோ்தல்களிலும் இவா் வெற்றிபெற்று தொடா்ந்து மூன்றாவது முறையாக எம்எல்ஏவாக இருந்து வந்தாா்.
மகேஸ்வரியுடன் சோ்த்து ராஜஸ்தானில் கடந்த சில தினங்களில் 3 எம்எல்ஏக்கள் உயிரிழந்திருப்பதால், மாநில சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 200-லிருந்து 197-ஆக குறைந்துள்ளது.