கரோனாவால் மிகப்பழமையான பழக்கத்தை கைவிடும் நிலையில் காஷ்மீரிகள்
பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனிக் குழுவாக அமர்ந்து உணவருந்தும் மிகப் பழமையான பழக்கத்தை கரோனா காரணமாக கைவிடும் நிலைக்கு காஷ்மீர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்: தஸ்தர்கான் அல்லது ஒரு அழகான துணியின் மீது டிராமி எனப்படும் பெரிய தட்டை வைத்து அதில் உணவு பரிமாறப்பட்டு பெண்கள் மற்றும் ஆண்கள் தனித்தனிக் குழுவாக அமர்ந்து உணவருந்தும் மிகப் பழமையான பழக்கத்தை கரோனா காரணமாக கைவிடும் நிலைக்கு காஷ்மீர் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
திருமணம் போன்ற வைபவங்களில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு இவ்வாறு உணவு பரிமாறும் சடங்கை, காஷ்மீரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்து வருகிறார்கள்.
மிகப்பெரிய டிராமி தட்டுகளுக்குப் பதிலாக சின்னச் சின்ன செம்புத் தட்டுகள் பழக்கத்துக்கு வந்துள்ளது.
Advertisement
ஸ்ரீநகரைச் சேர்ந்த ரியாஸ் அகமது கூறுகையில், எனது மகளின் திருமண ஏற்பாடுகள் கடந்த மாதம் நடந்தன. வஸ்வான் எனப்படும் விருந்தை, விருந்தினர்களுக்கு வழக்கமான டிராமிஸ்களைப் பயன்படுத்தாமல், தனித்தனி தட்டில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தேன். கரோனா தொற்றால் விருந்தினர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவே இந்த முடிவெடுக்கப்பட்டது என்கிறார்.
வந்திருந்த விருந்தினர்களுக்கும், உறவினர்களுக்கும் டிராமிஸ்கள்தான் வேண்டும் என்று வற்புறுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன் என்கிறார்.
விருந்தினர்களுக்கு தனித்தனியாக சோப்பு, கைக்கழுவும் திரவம், இப்போது தனித்தனியாக செம்பு தட்டுகள் என முன்பிருந்ததைவிட திருமணத்துக்கான செலவு அதிகரித்துவிட்டதாகவும் மற்றொரு காஷ்மீரி குலாம் ரசூல் கூறுகிறார். சிலர் குழுவாக அமர்ந்து சாப்பிடுவதை விரும்பவில்லை, முன்பிருந்ததைப் போல கூட்டம் கூடுவதுமில்லை என்கிறார்.
ஒருவேளை இந்த புதிய நடைமுறைகளால், டிராமிஸ் போன்ற பழைய பழக்க வழக்கங்கள் வழக்கொழிந்து போய்விடவும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கருதுவதாகக் கூறுகிறார்.