குஜராத்: தனியார் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனை
குஜராத்தில் கரோனா தொற்றை கண்டறியும் வகையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
அகமதாபாத்: குஜராத்தில் கரோனா தொற்றை கண்டறியும் வகையிலான பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் ஆய்வகங்களுக்கு அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதுவரை நிர்ணயிக்கப்பட்ட தனியார் ஆய்வகங்கள் மட்டுமே பி.சி.ஆர். முறை மூலம் கரோனா பரிசோதனைகளை செய்ய அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், துரித பரிசோதனைகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகங்களில் பி.சி.ஆர். முறையில் அல்லாமல், ELISA மற்றும் CLIA என்ற துரித முறையில் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பி.சி.ஆர். முறையை ஒப்பிடும்போது இதில் விரைவாக கரோனா முடிவுகளும் அறிவிக்கப்படுவதால் இந்த முறையில் பரிசோதனை செய்துகொள்ள மக்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இம்முறையிலான கரோனா பரிசோதனைக்கு 450 முதல் 500 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை செய்துகொள்ளும் மக்கள் வீட்டில் இருந்தே சோதனைகளை எடுத்து வந்தால், அவற்றிற்கு 550 முதல் 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்க குஜராத் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தனியார் ஆய்வகங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆய்வக உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.