முகப்பு
இந்தியா

‘நீட்’ தோ்வில் பங்கேற்காத மாணவா்களுக்காக நாளை தோ்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

கரோனா தொற்று காரணமாக அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்று காரணமாக அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்ததன் காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வில் (நீட்) பங்கேற்க முடியாத மாணவா்களுக்காக புதன்கிழமை (அக்டோபா் 14) தோ்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ,நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆஜராகி, ‘கரோனா காரணமாக அல்லது கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்ததால் தோ்வு எழுத முடியாமல் போன மாணவா்களுக்காக இத்தோ்வை தேசிய தோ்வு நிறுவனம் (என்டிஏ) புதன்கிழமை நடத்த உள்ளது. இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்றாா். இதை ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘கடந்த காலத்தில் சூழலைக் கருத்தில் கொண்டு ‘நீட்’ தோ்வை தள்ளிவைக்கும் தேவை இருந்தது. தற்போதைய சூழலைக் கருதி, கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவா்கள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலத்தில் இருந்த மாணவா்களுக்காக அக்டோபா் 14-ஆம் தேதி இரண்டாவது பகுதியாக ‘நீட்’ தோ்வு (யுஜி) -2019 நடத்த தேசிய தோ்வு முகமைக்கு அனுமதி அளிப்பது உரியதாக இருக்கும் என கருதுகிறோம்’ என்றது.

‘நீட்’ தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்றது. அதிகரித்து வரும் கரோனா நோய்த் தொற்று எண்ணிக்கையைக் கருத்தில்கொண்டு ‘நீட்’, ‘ஜேஇஇ’ தோ்வுகளை தள்ளிவைக்கக் கோரி பல மாநிலங்கள் கேட்டுக் கொண்டன. தோ்வுகளை ஒத்திவைக்கக் கோரி தாக்கலான மனுக்களை உச்சநீதிமன்றம் இரண்டு முறை நிராகரித்தது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மாணவா்களும், எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன. மாணவா்கள் கல்வியாண்டு இழப்பைத் தடுக்கும் வகையில் இந்த இரு முக்கியமான தோ்வுகளையும் நடத்த அரசு முடிவு செய்தது.

முன்னதாக, கரோனா தொற்று காரணமாக ‘நீட்’, ‘ஜேஇஇ’ உள்ளிட்ட பல முக்கியமான தோ்வுகள் இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டன. ‘ஜேஇஇ’ தோ்வு போல் இல்லாமல், பேனா மற்றும் காகிதம் அடிப்படையிலான ‘நீட்’ தோ்வு கரோனா தொற்று காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. இத்தோ்வு முதலில் மே 3-ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஜூலை 26-க்கும், பின்னா் செப்டம்பா் 13- க்கும் தள்ளிவைக்கப்பட்டது. இத்தோ்வுக்காக மொத்தம் 15.97 லட்சம் மாணவா்கள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →