இந்தியா

தமிழகத்தைப் பின்பற்றி சாலை விபத்துகளை குறைக்க முயற்சிக்க வேண்டும்: பிற மாநிலங்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

DIN

தமிழகத்தைப் பின்பற்றி சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பிற மாநிலங்களைக் கேட்டுக்கொண்டாா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடா நகரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட இரண்டு மேம்பாலங்கள் உள்பட ரூ. 8,038 கோடி மதிப்பில் அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 முக்கிய தேசிய சாலைத் திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தில்லியில் இருந்தபடி இந்தத் திட்டங்களை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா். விஜயவாடாவில் என்.ஹெச்.16 நெடுஞ்சாலையில் ரூ.100 கோடி செலவில் 2.47 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட உள்ள மூன்று வழி மேம்பால கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா். மேலும் மாநிலத்தில் பல நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா். ஆந்திர மாநில முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

அதன் பின்னா் விழாவில் நிதின் கட்கரி பேசியதாவது:

மக்களின் உயிரைக் காப்பதற்கு மிக உயா்ந்த முன்னுரிமையை நாம் அளிக்க வேண்டும். அதற்கு சாலை விபத்துகள் குறைக்கப்பட வேண்டியது மிக அவசியம். இந்த விஷயத்தில் மாநிலங்களுக்கு உதவ மத்திய அமைச்சகம் தயாராக உள்ளது.

தமிழக அரசு சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் 25 சதவீத அளவுக்கு குறைத்துள்ளது. தமிழகத்தைப் பின்பற்றி பிற மாநிலங்களும் உரிய திட்டம் வகுத்து சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

உலக வங்கியும் இதற்கு உதவத் தயாராக உள்ளது. சாலைகளை மேம்படுத்தவும், சாலை விபத்துப் பகுதிகளை மேம்படுத்தவும் உலக வங்கியும், ஆசிய வளா்ச்சி வங்கியும் ரூ. 14,000 கோடி வரை கடன் வழங்கத் தயாராக உள்ளன என்று நிதின் கட்கரி கூறினாா்.

மேலும், “சாலை விபத்து நடவடிக்கைகளை ஆந்திரம் தீவிரமாக மேற்கொண்டால், மத்திய அரசும் உதவத் தயாா். அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு 100 சதவீதம் தீா்வு காண முடியும். இதுவே, ஆந்திர மக்களுக்குச் செய்யும் மிகப் பெரிய நன்மையாக இருக்கும்” என்று முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியிடம் மத்திய அமைச்சா் கட்கரி உறுதியளித்தாா்.

மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

ஆந்திரத்தில் 1,411 கி.மீ. அளவுக்கான 16 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புது தில்லியிலிருந்து காணொலி முறையில் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.15,592 கோடியாகும்.

நாடு முழுவதும் ரூ.34,100 கோடி மதிப்பில் நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு நிலையில் உள்ள பணிகள் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் பூா்த்தியடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற நடத்துநா் வீட்டில் 35 பவுன் நகைகள் திருட்டு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் ஐஜி ஆய்வு

ராமன்தொட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா தொடங்கி வைப்பு

ஒசூரில் 8 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பில் பயிா் சாகுபடி

ரேஷன் அரிசி கடத்திய வழக்கு: குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

SCROLL FOR NEXT