தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்கள்: பிரதமருக்கு நன்றி
ஒடிசாவிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க அனுமதியளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்துள்ளார்.
ஒடிசாவிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்க அனுமதியளித்ததற்காக பிரதமர் மோடிக்கும், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கும், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் வேலையின்மையால் ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தற்போது 4வது கட்டமாக ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் தொழில்புரிந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர்.
இதனிடையே ஒடிசாவிலிருந்து பணிக்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ள தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மூன்று இணை சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பிரதமர் மோடி மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ஒடிசா மக்களுக்காக முக்கியத்துவம் அளித்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி. எனது கோரிக்கையை ஏற்று ஒடிசா மக்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று சேர வசதியாக சிறப்பு ரயில்களை இயக்க அனுமதியளித்த அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி. ஒடிசாவிலுள்ள தொழிலாளர்கள் அகமதாபாத், சூரத் ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் பணிக்கு செல்ல உள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
3 இணை சிறப்பு ரயில்களும் (மறுவழித்தடத்தில் 3 ரயில்கள்) புரி-அகமதாபாத், புரி-காந்திதம், புரி-ஓகா ஆகிய வழித்தடங்களில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.