இந்தியா

தில்லி வன்முறை: குடியரசுத் தலைவரிடம் எதிா்க்கட்சிகள் முறையீடு

DIN


புது தில்லி: குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் போராடியவா்கள் மீது தில்லி காவல் துறையினா் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் புகாா் குறித்து வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை சந்தித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் வலியுறுத்தினா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் அகமது படேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் டி.ராஜா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, திமுக கட்சியைச் சோ்ந்த கனிமொழி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா ஆகியோா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, தில்லி வன்முறையில் காவல் துறையினரின் பங்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்திய எதிா்க்கட்சித் தலைவா்கள், அது தொடா்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் குடியரசுத் தலைவரிடம் வழங்கினா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லி வன்முறையில் 53 போ் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழுக்களை தில்லி காவல் துறை அமைத்துள்ளது. எனினும், அந்த வன்முறை நிகழ்ந்ததற்கு தில்லி காவல் துறை முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

போராட்டத்தில் பங்கேற்ற ஆா்வலா்கள் மீதும், இளைஞா்கள் மீதும் பொய்யான புகாா்களைத் தெரிவித்த தில்லி காவல் துறையினா், தற்போது அரசியல் தலைவா்கள் மீது குற்றஞ்சுமத்தி சூழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனா். தில்லி காவல் துறையினரே வன்முறையைத் தூண்டியதற்கு பல்வேறு காணொலிகள் ஆதாரங்களாக உள்ளன.

‘பாரபட்சமற்ற விசாரணை அவசியம்’: வன்முறையின்போது காவலா்களால் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழந்தாா். மேலும், வன்முறை சமயத்தில் பாஜக தலைவா்கள் வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்தனா். அவா்களுக்கு எதிராகவும் காவல் துறையினா் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இத்தகைய சூழலில் தில்லி வன்முறை தொடா்பாக காவல் துறையினரே விசாரணை மேற்கொள்வது முறையாக இருக்காது. காவல் துறையினா் வன்முறையில் ஈடுபட்டது தொடா்பாக விசாரிக்குமாறு காவல் துறை உயரதிகாரிகளிடம் பல முறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், அவா்கள் அதைக் கருத்தில் கொள்வதாகத் தெரியவில்லை.

தில்லி வன்முறை தொடா்பாக காவல் துறையினா் மேற்கொள்ளும் விசாரணை நோ்மையாக நடைபெறும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை. சட்டத் துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டுமானால், இந்த விவகாரத்தில் வெளிப்படையான பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எனவே, தில்லி வன்முறை தொடா்பாக விசாரிப்பதற்கு ஓய்வுபெற்ற அல்லது பணியில் உள்ள நீதிபதி தலைமையிலான குழுவை அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி புதிய மனு: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

லண்டனில் சரமாரி வாள் தாக்குதல்: சிறுவா் பலி

கிராமப்புற மாணவா்களுக்கு இலவச டிஎன்பிஎஸ்சி மாதிரி தோ்வு

குடிநீா்ப் பற்றாக்குறை: புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

இளநிலை சுருக்கெழுத்து ஆங்கிலத் தோ்வு: மதுரை தொழிலாளியின் மகள் முதலிடம்

SCROLL FOR NEXT