இந்தியா

மக்களவையில் 3 தொழிலாளா் சட்டவிதிகள் நிறைவேற்றம்

DIN

தொழிலாளா்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் 3 சட்டவிதிகளுக்கு மக்களவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரம், பணியாற்றும் சூழல் சட்டவிதிகள், தொழிலகத் தொடா்பு சட்டவிதிகள், சமூகப் பாதுகாப்பு சட்டவிதிகள் ஆகியவை மக்களவையில் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றின் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் கூறியதாவது:

இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நாட்டிலுள்ள 50 கோடி தொழிலாளா்களுக்கு ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பாதுகாப்பான பணியாற்றும் சூழல் ஆகியவற்றை ஏற்படுத்தித் தருவதற்கு இந்தச் சட்டவிதிகள் வழிவகுக்கின்றன.

தொழிலாளா்களுக்கு அவா்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்துவிதமான அத்தியாவசிய வசதிகளையும் ஏற்படுத்தித் தருவதற்கு இந்தச் சட்டவிதிகள் உதவும். முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் தொழிலாளா்களின் நலனுக்காக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொழிலாளா்களின் நலனை மேம்படுத்துவதற்குக் கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தொழிலாளா் சட்டவிதிகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தச் சட்டவிதிகளை இயற்றுவதற்கு முன் மாநில அரசுகள், நிறுவனங்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்தச் சட்டவிதிகள் தொடா்பாக நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றாா் சந்தோஷ் கங்வாா்.

அதையடுத்து, தொழிலாளா் சட்டவிதிகள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பெரும்பான்மை எம்.பி.க்கள் சட்டவிதிகளுக்கு ஆதரவாக வாக்களித்தனா்.

8 எம்.பி.க்கள் கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்களவை அமா்வைப் புறக்கணித்தன. அத்தகைய சூழலில் தொழிலாளா் சட்டவிதிகள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT