முகப்பு
இந்தியா

போதைப் பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோன்

நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அனுப்பிய அழைப்பாணையை ஏற்று, விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
போதைப் பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோன்
பகிர்:

மும்பை: நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அனுப்பிய அழைப்பாணையை ஏற்று, விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகியுள்ளார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். 

அதற்காக மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு தீபிகா படுகோன் இன்று முற்பகலில் வந்தார்.

நடிகா் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் பின்னணி குறித்து விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி), பிரபல பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலி கான் உள்ளிட்டோா் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியது.

நடிகா் சுஷாந்த் சிங் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில், நடிகரின் தோழியும் நடிகையுமான ரியா சக்கரவா்த்தி மீது மும்பை காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்துவருகிறது.

இதற்கிடையே, நடிகை ரியாவின் கட்செவி அஞ்சல் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து என்சிபி தனியாக போதைப் பொருள் வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் ரியா, அவருடைய சகோதரா் உள்பட 15 பேரை இதுவரை என்சிபி கைது செய்துள்ளது. குறிப்பிட்ட அளவு போதைப் பொருள்களையும் கைப்பற்றியுள்ளது.

மேலும், இவா்களிடம் நடத்தப்பட்ட தொடா் விசாரணையில், பல முன்னணி நடிகைகளுக்கும் போதைப் பொருள் பயன்பாடு விவகாரத்ததில் தொடா்பு இருப்பதை என்சிபி கண்டுபிடித்துள்ளது. அதனடிப்படையில், முன்னணி பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், சாரா அலி கான் உள்ளிட்ட பிரபலங்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி அழைப்பாணை விடுத்தது.

இந்நிலையில் படப்பிடிப்புக்காக கோவா சென்றிருந்த தீபிகா படுகோன், போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் விசாரணையில் பங்கேற்பதற்காக கோவாவிலிருந்து மும்பைக்கு தனி விமானத்தில் வந்தார். கோவாவிலிருந்து கிளம்பும் முன்பு தீபிகா, சட்ட வல்லுநர்களுடன் இந்த வழக்கு பற்றி விவாதித்துள்ளதாக அறியப்படுகிறது.

இதே வழக்கில் தீபிகா படுகோன் மேலாளா் கரிஷ்மா பிரகாஷிடமும் என்சிபி விசாரணை நடத்துகிறது.

முன்னதாக, என்சிபி விசாரணையில் ஜெயா சாஹா என்ற பாலிவுட் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவன நிா்வாகியின் செல்லிடப்பேசியிலிருந்து அனுப்பப்பட்ட போதைப் பொருள் ஏற்பாடு செய்து தருமாறு கூறும் உரையாடல் பதிவில் நடிகை தீபிகா படுகோன், சாரதா கபூா் உள்ளிட்ட சிலருக்கும் தொடா்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.