தில்லியில் இருந்து 7 மாநிலங்கள், 2,700 கி.மீ. கடந்து கேரளம் வந்த முதிய தம்பதியில் ஒருவருக்கு கரோனா
ஊரடங்கு கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து தில்லியில் இருந்து புறப்பட்டு 7 மாநிலங்களைக் கடந்து சுமார் 2,700 கி.மீ. தொலைவை சாலை மார்கமாகவே
ஊரடங்கு கட்டுப்பாடுகளை எல்லாம் கடந்து தில்லியில் இருந்து புறப்பட்டு 7 மாநிலங்களைக் கடந்து சுமார் 2,700 கி.மீ. தொலைவை சாலை மார்கமாகவே கடந்து கேரளம் வந்தடைந்த முதிய தம்பதியில் மூதாட்டிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய இந்த முதிய தம்பதியினர் மார்ச் 21ம் தேதி இந்தியா வந்தனர். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் தில்லிலேயே ஒரு ஹோட்டலில் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டனர்.
14 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கு கரோனா அறிகுறி இல்லாததால், சொந்த ஊர் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி வாடகைக் காரில் அவர்கள் கேரளம் புறப்பட்டனர்.
Advertisement
தொடர்ந்து இரண்டு நாட்கள், 7 மாநிலங்கள், 2700 கி.மீ. தொலைவை அவர்கள் கார் மூலமாகக் கடந்து வந்தனர். அவர்கள் எங்குமே தடுத்து நிறுத்தப்படவில்லை. இறுதியாக கோட்டயம் வந்து சேர்ந்தனர்.
உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு வழியாக அவர்கள் கேரளத்தை அடைந்துள்ளனர்.
அங்கு அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை, முதிய தம்பதியை மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். அந்த தம்பதிக்கு அவர்களது உறவினரான தில்லியைச் சேர்ந்த காவலரே காரை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். இதையடுத்து சோதனைச் சாவடியில் முதிய தம்பதியை விட்டுவிட்டு ஓட்டுநர் காருடன் தில்லி திரும்பிவிட்டார். காருக்கு வாடகையாக அந்த தம்பதி ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அவருக்கு கேரளத்தைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் சிறப்பு அனுமதி சீட்டு வாங்கிக் கொடுத்திருப்பதாகவும், அதன் மூலமாக அவர்கள் பல மாநில எல்லைகளை எளிதாகக் கடந்திருப்பதாகவும் தெரிகிறது.
வெறும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டு அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர். எங்கேயும் ஓய்வு எடுக்கக் கூட அவர்கள் காரை நிறுத்தவில்லையாம். இதையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா சோதனை செய்யப்பட்டது. முதிய தம்பதியில், 65 வயது மூதாட்டிக்கு கரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. கணவருக்கு கரோனா பாதிப்பில்லை. இதையடுத்து மூதாட்டி கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மைதானா என்பது குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்.