கடந்த 24 மணி நேரத்தில் 3,900 பேர் பாதிப்பு; 195 பேர் பலி: மத்திய சுகாதாரத் துறை தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 3,900 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 3,900 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்புஎண்ணிக்கை 46,433 ஆகவும், உயிரிழப்பு 1,568 ஆகவும் உயர்ந்துள்ளது.
Advertisement
நேற்று மட்டும் 1,020 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். கரோனா மீட்பு விகிதம் 27.41% ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 12,727 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்னும் சில மாநிலங்கள் உயிரிழந்தோரின் விவரத்தை அளிக்க காலதாமதமாகியுள்ளது. அந்த விவரங்கள் வந்தபிறகு தெரிவிக்கப்படும் என்றார்.