கேரளத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி தெரிவிக்கையில்,
"கேரளத்தில் புதிதாக 26 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக பாதிப்புக்குள்ளான 26 பேரில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 7 பேர் பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்கள்.
ஊரடங்கு நீடித்தாலும், நீடிக்காவிட்டாலும் கரோனாவின் அபாயம் பற்றி மனதில் வைத்து அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும். இந்த நிலையைத்தான் நாம் இனிமேல் எதிர்கொள்ளவுள்ளோம். ஆனால், அதை எதிர்த்து போரிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. முகக் கவசங்கள், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்." என்றார்.
இன்றைய தேதியில் கேரளத்தில் மொத்தம் 560 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 64 பேர் சிகிச்சையில் உள்ளனர். 36,362 பேர் வீடுகளிலும், 548 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். கேரளத்தில் மொத்தம் 15 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன.