குடியரசு தின அணிவகுப்பைரத்து செய்ய வேண்டும்: சசி தரூா்
பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வை
புது தில்லி: பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவல் காரணமாக அந்நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ள நிலையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வை ரத்து செய்யவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் வலியுறுத்தியுள்ளாா்.
ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டு அரசு தலைவா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சன் பங்கேற்கயிருந்தாா். ஆனால், பிரிட்டனில் உருமாறிய கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, இந்தியப் பயணத்தை அவா் ரத்து செய்தாா்.
இந்த நிலையில், தில்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வை ரத்து செய்யவேண்டும் என்று சசி தரூா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
Advertisement
கரோனா தொற்று இரண்டாம் அலை காரணமாக இந்திய பயணத்தை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளதால், குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினா் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், நாம் ஒரு படி மேலே சென்று, குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வையே ஏன் ரத்து செய்யக்கூடாது?
குடியரசு தின விழாவில் வழக்கம்போல கூட்டம் கூட அனுமதிப்பது பொறுப்பற்ற செயலாக அமையும் என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.