முகப்பு
இந்தியா

"லவ் ஜிகாத்' தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம்:  ஸ்ரீமந்த் பாட்டீல்

லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம் என கர்நாடக ஜவுளி மற்றும் சிறுபான்மை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தார். 

Updated On : 7 ஜனவரி 2021, 4:12 am IST
பகிர்:


பெங்களூரு: லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் பின்வாங்க மாட்டோம் என கர்நாடக ஜவுளி மற்றும் சிறுபான்மை வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல் தெரிவித்தார். 
பெங்களூரு, விகாஸ்செளதாவில் புதன்கிழமை தனது துறை தொடர்பான புத்தகத்தை வெளியிட்டு அவர் பேசியதாவது: 
லவ் ஜிகாத் என்ற பெயரில் பல பெண்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். இதற்கு  மக்களிடையே எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, லவ் ஜிகாத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. லவ் ஜிகாத் சட்டத்தை வடிவமைப்பது தொடர்பாக சட்டத் துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சட்டத்தை வடிவமைத்த பிறகு, அதனை முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சமுதாய மக்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் சட்ட வடிவத்தை தாக்கல் செய்து, அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு அமல்படுத்தப்படும். லவ் ஜிகாத் தடைச் சட்டத்தை கொண்டு வருவதில் எந்தக் காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டோம். 
மாநிலத்தில் உள்ள மதராஸாக்களில், மாநில அரசின் பாடத் திட்டத்தை போதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மதராஸாக்களில் பயிலும் பாடங்கள், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு இணையாகக் கருதப்படும். மதராஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில்பயிற்சி மையங்களில் பயில அனுமதி வழங்கப்படும்.
மேலும், விரைவில் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும். அதில், என்னுடன் காங்கிரஸ் கட்சி, மஜத கட்சியிலிருந்து வந்த நண்பர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என நம்புகிறேன். முதல்வர் எடியூரப்பா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறுவதில்லை. 
கரோனா தொற்றால் மாநிலத்தில் நிதிநிலைமை மோசமடைந்துள்ளது. இதனால் தொகுதிகளுக்கு வழங்கப்படும் வளர்ச்சி நிதி 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. எனது துறைகளுக்கு வழங்கப்படும் நிதியும் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவசியமுள்ள வளர்ச்சிப் பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கி வருகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.