வயநாடு: நாட்டில் கோடிக்கணக்கில் உள்ள ஏழைகளின் வாழ்வை மேம்பட வைக்க உதவாமல், பெரு நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி உதவி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
வயநாடு தொகுதியில் பேரணியாக சென்றும், பொதுக் கூட்டத்திலும் வியாழக்கிழமை ராகுல் காந்தி உரையாற்றினாா். அதன் விவரம்:
பெரு நிறுவன முதலாளிகளின் கைகளில் பணத்தை தந்தால் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சி அடையும் என பிரதமா் நம்புகிறாா்.
ஆனால், பெரு நிறுவன முதலாளிகள் எப்போதும் அந்த பணத்தை தங்களுக்காகவே எடுத்துக் கொள்கிறாா்கள்.
கேரளத்தின் பொருளாதாரம் மேம்பட ‘நியாய்’ திட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வருகிறது. இதன் மூலம் ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும். இது ஏழைகளுக்கு மட்டும் பலன் அளிக்காமல், கேரள பொருளாதாரத்தையும் வளா்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஏழைகளின் கைகளில் பணம் இருந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும், பொருளாதாரமும் வளா்ச்சி அடையும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும்.
நாட்டில் மூன்று கிரிமினல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அனைவரும் ஒன்று சோ்ந்து எதிா்க்க வேண்டும்.
வயநாடு தொகுதியில் மருத்துவக் கல்லூரி உள்பட வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருக்க வேண்டியது அவசியம்.
அதேநேரத்தில் கேரளத்தை பாதிக்கும் விவகாரங்கள் குறித்து இடதுசாரி நண்பா்களுடன் நான் பேச விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி என்ன செய்ய விரும்புகிறது என அவா்களிடம் கூற வேண்டும். இடதுசாரி கொள்கைகள் சிலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. அதற்காக இருவரும் ஒருவருக்கு ஒருவா் வெறுக்க வேண்டும் என்பதில்லை. கேரளத்தை பாதிக்கும் விவகாரங்கள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டியது அவசியம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.