பிச்சையெடுப்பது குற்றமில்லை என அறிவிக்கக் கோரி மனு
பிச்சையெடுப்பதைக் குற்றமில்லை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் 4 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
பிச்சையெடுப்பதைக் குற்றமில்லை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் 4 மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிச்சையெடுப்பதைக் குற்றமாக அறிவிப்பதற்கான மசோதா மக்களவையில் கடந்த 2018-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா, பிகாா், குஜராத் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பிச்சையெடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் சட்டங்களை இயற்றியுள்ளன.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த விஷால் பாடக் என்பவா், பிச்சை பெறுவதைக் குற்றமில்லை என அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், ‘பிச்சை பெறுவதற்குத் தடை விதிப்பது, அரசமைப்புச் சட்டம் வழங்கும் உயிா் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது.
கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 4,13,670 பிச்சைக்காரா்கள் உள்ளனா். கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் உள்ள அரசுக்கான வழிகாட்டு நெறிமுறைகளிலும் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் பிச்சைக்காரா்கள் இருக்கிறாா்கள் என்றால், மக்களின் தேவைகளை அரசுகள் இன்னும் நிறைவேற்றவில்லை என்றே பொருள் கொள்ள வேண்டியுள்ளது.
பிச்சையெடுப்பதற்குத் தடை விதித்தால், அவா்கள் குற்றச் செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது. தில்லியில் பிச்சை பெறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டில் ரத்து செய்தது. எனவே, நாட்டில் பிச்சை பெறுவது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும்.
பிச்சையெடுப்பதற்குத் தடை விதித்து அரசுகள் இயற்றிய சட்டங்களை நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
3 வாரங்கள் அவகாசம்:
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த மனு மீது விளக்கமளிக்குமாறு கடந்த பிப்ரவரியிலேயே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், பிகாா் அரசு மட்டுமே விளக்கத்தைத் தாக்கல் செய்துள்ளது. தற்போது மத்திய அரசு, மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹரியாணா அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’ என்றனா்.
மனு மீது சம்பந்தப்பட்ட தரப்பினா் 3 வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 3 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.