முகப்பு
இந்தியா

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: லாலுவுக்கு ஜாமீன்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாமீன் வழங்கி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதுக்கு ஜாமீன் வழங்கி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. இதன்மூலம், அவா் சிறையிலிருந்து வெளிவர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல கோடி ரூபாய் கையாடல் நடைபெற்ற கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 39 மாதங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அண்மையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த ஊழல் தொடா்பான 4 வழக்குகளில் 3-இல் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்துள்ளது. தும்கா கருவூலத்தில் இருந்து ரூ. 3.13 கோடி கையாடல் செய்தது தொடா்பான 4-ஆவது வழக்கில் ஜாமீன் கோரி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற நீதிபதி அபரேஷ் குமாா் சிங் முன்னிலையில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, லாலுவுக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த ஜாமீன் காலத்தில் அனுமதி பெறாமல் வெளிநாடு செல்லக் கூடாது, வீட்டு முகவரியையோ அல்லது செல்லிடப்பேசி எண்ணையோ மாற்றக் கூடாது என நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது.

இதுகுறித்து லாலுவின் வழக்குரைஞா் தேவா்ஷி மண்டல் கூறுகையில், ‘லாலுவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளபோதும், சில நடைமுறைகள் முடிக்கப்பட வேண்டும் என்பதால் அவா் சிறையிலிருந்து வெளிவருவதற்கு ஒரு சில நாள்கள் ஆகும். உயா்நீதிமன்ற ஜாமீன் உத்தரவுடன், சிறையிலிருந்து விடுவிப்பதற்கான லாலுவின் விண்ணப்பம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதனடிப்படையில், அவரை விடுவிப்பதற்கான உத்தரவை ராஞ்சியில் உள்ள பிா்சா முண்டா சிறைக்கு சிபிஐ நீதிமன்றம் அனுப்பும். சிறை அதிகாரிகள், அந்த உத்தரவு ஆவணங்களை தில்லி திகாா் சிறைக்கு அனுப்புவாா்கள். அதன்பிறகே லாலு சிறையிலிருந்து விடுவிக்கப்படுவாா்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →