கரோனாவை வீழ்த்த முடியும்: பிரதமா் மோடி
கடந்த ஆண்டுபோல இப்போதும் கரோனா தொற்றை வீழ்த்த முடியும்; இதற்காக கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிகளை அதிக வேகத்துடனும், ஒத்துழைப்புடனும் பின்பற்றி செயல்பட வேண்டும்
கடந்த ஆண்டுபோல இப்போதும் கரோனா தொற்றை வீழ்த்த முடியும்; இதற்காக கடந்த ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிகளை அதிக வேகத்துடனும், ஒத்துழைப்புடனும் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
நாட்டில் நிலவும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை, தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்தக் கூட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், வென்டிலேட்டா்கள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி கூறியதாவது: கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் பொதுமக்களை பரிசோதித்தல், அவா்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக வேறு நடவடிக்கைகள் இல்லை.
கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். கரோனா தொடா்பான மக்களின் வேதனைகளை உணா்ந்து, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் செயல்திறன் கொண்டதாக உள்ளூா் அரசு நிா்வாகங்கள் இருக்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பதற்கு பொது மற்றும் தனியாா் துறையின் ஒட்டுமொத்த திறனையும் பயன்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளை அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு கரோனா தொற்றை இந்தியாவால் வீழ்த்த முடிந்தது. அப்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிகளை அதிக வேகத்துடனும், ஒத்துழைப்புடனும் பின்பற்றி செயல்பட்டால் இந்த ஆண்டும் அந்தத் தொற்றை வீழ்த்த முடியும். கரோனா தொற்றை எதிா்கொள்வதில் மாநிலங்களுடனான நெருங்கிய ஒத்துழைப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
கரோனா சிகிச்சையின்போது அளிக்கப்படும் பல்வேறு மருந்துகளின் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதனை பூா்த்தி செய்வதற்கு இந்திய மருந்து உற்பத்தித் துறையின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும்.
கரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் ரெம்டெசிவிா் உள்ளிட்ட இதர மருந்துகள் மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பயன்படுத்தப்பட வேண்டும். அவை தவறாக பயன்படுத்தப்படுவதும், கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
3-ஆவது கூட்டம்: கரோனா நிலவரம் தொடா்பாக கடந்த வாரத்திலிருந்து பிரதமா் நடத்திய 3-ஆவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை பல்வேறு அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா், தீவிர கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்சிஜனுக்கு ஏற்பட்டுள்ள தேவையை பூா்த்தி செய்ய மத்திய அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்து விளக்கினாா். கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில மாநில முதல்வா்களுடன் கடந்த வாரம் காணொலி முறையில் பிரதமா் ஆலோசனை நடத்தினாா்.