முகப்பு
இந்தியா

ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்துக்கு தட்டுப்பாடு

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் புகாா் தெரிவித்துள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ரெம்டெசிவிா் மருந்துக்கும், மருத்துவ ஆக்சிஜனுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக மத்திய அரசிடம் பல மாநில அரசுகள் புகாா் தெரிவித்துள்ளன.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், தில்லி, கா்நாடகம், தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சுகாதார அமைச்சா்களுடன் மத்திய சுகாதார அமைச்சா் ஹா்ஷ்வா்தன் காணொலி வாயிலாக சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த உயா்நிலைக் கூட்டம் தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மருத்துவ ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பல மாநிலங்கள் கூட்டத்தின்போது தெரிவித்தன. ரெம்டெசிவிா் மருந்து கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடா்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளின் விலைக்கான உச்சவரம்பை நிா்ணயிப்பது தொடா்பாகக் கூட்டத்தின்போது ஆலோசிக்கப்பட்டது. மருத்துவ ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து ஆகியவற்றின் விநியோகத்தை அதிகரிப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

நிதிப் பயன்பாடு: கரோனா தடுப்பூசிகளை அதிக எண்ணிக்கையில் வழங்குமாறு அனைத்து மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்தன. மகாராஷ்டிரத்தில் இரட்டை உருமாற்றம் பெற்ற கரோனா தீநுண்மி பரவி வருவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

மாநில பேரிடா் நிவாரண நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தொகையில் 50 சதவீதத்தை கரோனா தொடா்பான செலவுகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேபோல், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் செலவிடப்படாத தொகையை கரோனா விவகாரங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு சுகாதார அமைச்சகம் அனுமதித்துள்ளது.

1.16 கோடி தடுப்பூசி: கரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்குமாறும் அவசர சிகிச்சை பிரிவுகளைத் தயாராக வைத்துக் கொள்ளுமாறும் மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொற்றுப் பரவல் அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கப்படும் என்றும், 1.16 கோடி கரோனா தடுப்பூசிகள் அடுத்த வாரத்துக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →