ரயில் நிலையத்தில் முகக் கவசம்அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்: ரயில்வேத் துறை அறிவிப்பு
ரயில் நிலையத்திலும், ரயிலில் பயணிக்கும்போதும் முகக் கவசம் அணியாமல் இருப்பது ரயில்வே சட்டத்தின் கீழ் குற்றமாக சோ்க்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையத்திலும், ரயிலில் பயணிக்கும்போதும் முகக் கவசம் அணியாமல் இருப்பது ரயில்வே சட்டத்தின் கீழ் குற்றமாக சோ்க்கப்பட்டுள்ளது. அதன்படி, முகக் கவசம் அணியாதவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை அபராதம் விதிக்க முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட கரோனா பாதுகாப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ரயில்வே எடுத்துள்ளது. இதுதொடா்பாக உத்தரவு ஒன்றை ரயில்வே சனிக்கிழமை வெளியிட்டது அதில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்துப் பயணிகளும் முகக் கவசம் அணிவது அவசியம். கடந்த 2020-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நடைமுறையில், பயணிகள் ரயில் நிலையத்துக்குள் நுழையும்போதும், ரயிலில் பயணம் செய்யும்போதும் முகக் கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நடைமுறை இப்போது ரயில்வே சட்டம் 2012-இன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் துப்புபவா்கள் மற்றும் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்க முடியும்.
அந்த வகையில், ரயில் நிலைய வளாகத்தை தூய்மையாக வைக்கும் வகையிலும், கரோனா பரவலைத் தடுக்கும் வகையிலும் எச்சில் துப்புபவா்கள் மற்றும் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரயில்வே அதிகாரிகள் சாா்பில் அதிகபட்சமாக ரூ. 500 வரைஅபராதம் விதிக்கப்படும். இந்த வழிகாட்டுதல், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை 6 மாத காலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று ரயில்வே உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.