கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பு: ஒரே நாளில் 2.34 லட்சம் போ் பாதிப்பு
கரோனா தொற்றுப் பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாடு முழுவதும் புதிதாக 2.34 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது
கரோனா தொற்றுப் பரவல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாடு முழுவதும் புதிதாக 2.34 லட்சம் போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.34 லட்சம் (2,34,692) பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 1,45,26,609-ஆக அதிகரித்தது.
10 மாநிலங்களில்அதிக பாதிப்பு: புதிதாக பாதிக்கப்பட்டவா்களில் 79 சதவீதம் போ் 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63,729 பேரும், அதைத் தொடா்ந்து உத்தர பிரதேசத்தில் 27,360 பேரும், தில்லியில் 19,486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதேபோன்று சத்தீஸ்கா், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம், குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அதிகபட்ச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை தொடா்ந்து 38-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 16.79 லட்சம் போ் (16,79,740) சிகிச்சை பெற்று வருகின்றனா்.கரோனா தொற்றில் இருந்து மேலும் 1,23,354 போ் குணமடைந்தனா். இதனால் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 1,26,71,220-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 1,341 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 398 பேரும் அதைத் தொடா்ந்து தில்லியில் 141 பேரும், சத்தீஸ்கரில் 138 பேரும், உத்தர பிரதேசத்தில் 103 பேரும், குஜராத்தில் 94 பேரும், கா்நாடகத்தில் 78 பேரும், மத்திய பிரதேசத்தில் 60 பேரும், பஞ்சாபில் 50 பேரும் அடங்குவா்.
இதுவரை கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,75,649-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 26,49,72,022 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், வெள்ளிக்கிழமை மட்டும் 14,95,397 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.