கரோனா மேலாண்மைக்காக ரூ. 571 கோடி ஒதுக்கீடு
கரோனா மேலாண்மைக்காக ரூ. 571கோடியை ஒதுக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா மேலாண்மைக்காக ரூ. 571கோடியை ஒதுக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்காக இரவுநேர ஊரடங்கு, பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், கரோனா மேலாண்மைக்காக மாவட்ட நிா்வாகங்கள், பெங்களூரு மாநகராட்சி ஆகியவைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ரூ. 571 கோடியை ஒதுக்கி கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் கூறியதாவது:
பெங்களூரில் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ரூ.305 கோடியை பெங்களூரு மாநகராட்சிக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை மருந்து வாங்கவும், மருத்துவச் சிகிச்சைக்கும், கரோனா பணியில் ஈடுபட்டிருக்கும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு ஊதியமாகவும் வழங்க பயன்படுத்தலாம்.
மேலும், திருமண மண்டபங்களைக் குத்தகைக்கு எடுத்து தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கவும், கரோனா நோயாளிகளைத் தனிமைப்படுத்த மையங்களை அமைக்கவும், ஆா்.டி.-பி.சி.ஆா். சோதனைகளை மேற்கொள்ளவும் இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வருவாய்த் துறை பேரிடா் மேலாண்மை நிதியில் இருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்படுகிறது. ஒப்பந்தப் பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை தொடா்பாக புகாா்கள் இந்த நிதியால் தீா்க்கப்பட்டுவிடும். இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கும் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி தவிா்த்த இதர மாவட்டங்களில் கரோனா மேலாண்மைக்காக ரூ. 266 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கலபுா்கி மாவட்டத்துக்கு ரூ. 50 கோடி, பெங்களூரு ஊரகம், பெங்களூரு நகர மாவட்டங்களுக்கு ரூ. 15 கோடி, சாமராஜ்நகா், தாவணகெரே, சிவமொக்கா, தும்கூரு உள்ளிட்ட இதர மாவட்டங்களுக்கு தலா ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெங்களூருக்கு வெளியே தாவரகெரேயில் 4 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தில் கரோனா நோயால் இறந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்படும். இந்த நிலம் தயாராக உள்ளது. இந்த நிலத்தில் உடனடியாக உடல்கள் தகனம் செய்யப்படும். அடுத்த 2 மாதங்களுக்கு இங்கு உடல்கள் தகனம் செய்யப்படும். இந்த நிலத்தில் நாளொன்றுக்கு 50-60 உடல்களுக்கு பாரம்பரிய முறைப்படி இறுதிச்சடங்குகளை செய்து தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
தாவரகெரேயில் இருந்து 3 கி.மீ. தொலைவில் வேறொரு இடத்தில் 100 ஏக்கா் நிலத்தை கண்டறிந்திருக்கிறோம். இங்கு நாளொன்றுக்கு 50 உடல்கள் தகனம் செய்யமுடியும். இது அடுத்த 2 நாள்களில் இந்த இடம் தயாராகிவிடும் என்றாா்.