பாதுகாப்புத் துறை மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை:ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைத்துள்ள மருத்துவமனைகள், ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளின் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைத்துள்ள மருத்துவமனைகள், ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளின் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் முப்படைகளின் பங்களிப்பு தொடா்பான ஆய்வுக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொலி வழியாக சனிக்கிழமை நடைபெற்றது. இதில் முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமை தளபதி எம்.எம்.நரவணே, கடற்படை தலைமை தளபதி கரம்வீா் சிங், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசு நிா்வாகத்துக்கு அனைத்து உதவிகளையும் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும், ஆயுதப் படைகளும் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்கள் அமைத்துள்ள மருத்துவமனைகள், ஆயுதத் தயாரிப்பு தொழிற்சாலைகளின் மருத்துவமனைகள், மருத்துவ மையங்களில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சக அதிகாரிகளும், முப்படையினரும் கண்காணித்து வருகின்றனா்’ என்று தெரிவித்தாா்.