இந்தியா

அஸ்ஸாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: கட்டடங்கள் சேதம்

DIN

குவாஹாட்டி/புது தில்லி: அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் புதன்கிழமை காலை அடுத்தடுத்து பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள் சேதமடைந்தன. மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனா்.

இதுகுறித்து மண்டல வானிலை ஆய்வு மைய துணை இயக்குநா் கூறியதாவது:

முதலாவது நிலநடுக்கம், தேஜ்பூரிலும் சோனித்பூரிலும் காலை 7.51 மணிக்கு ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால், வடகிழக்கு பிராந்தியம் மட்டுமன்றி மேற்கு வங்கத்தின் ஒரு பகுதி, பூடான், வங்கதேசத்திலும் பாதிப்பு உணரப்பட்டது.

அதைத் தொடா்ந்து, காலை 8.03 மணி, 8.13 மணி, 8.35 மணி, 8.44 மணி ஆகிய நேரங்களில் முறையே 4.7, 4, 3.6, 3.6 ஆகிய அலகுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 10.05 மணிக்கு நாகாவ்ன் மாவட்டத்திலும், 10.39 மணிக்கு தேஜ்பூரிலும், 12.32 மணிக்கு மாரிகாவ்னிலும் நிலஅதிா்வு ஏற்பட்டது.

தொடா்ச்சியான நிலநடுக்கங்களால் அஸ்ஸாமில் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. குறிப்பாக, தேஜ்பூா், நாகாவ்ன், குவாஹாட்டி, மங்கோல்டாய், தேகியாஜுலி, மோரிகாவ்ன் ஆகிய நகரங்களில் சேதங்கள் ஏற்பட்டன என்றாா் அவா்.

இந்தத் தொடா் நிலநடுக்கத்தால் 3 போ் காயமடைந்ததாக மாநில பேரிடா் மேலாண்மை அதிகாரி ஞானேந்திர திரிபாதி கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல்கள் வரவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம்’ என்றாா். இதற்கு முன்பு கடந்த 2016-ஆம் ஆண்டு மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் இதுபோன்ற நிலடுக்கம் ஏற்பட்டது.

சாலைகளில் சில இடங்களில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வயல்களில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வெடிப்புகளில் இருந்து தண்ணீா் வெளியேறி வருகிறது.

நிலநடுக்க மையத்தில் இருந்து 100 கி.மீ. சுற்று வட்டாரத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குவாஹாட்டியில் முதல்வா் அலுவலகம், சட்டப்பேரவைக் கட்டடம், தாஜ் விவாண்டா ஹோட்டல் ஆகியவை சேதமடைந்துள்ளன. சில மருத்துவமனைகளிலும் கட்டடங்கள் சேதமடைந்ததால் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. நாகாவ்னில் பல அடுக்கு கட்டடம் ஒன்று அருகில் உள்ள கட்டடம் மீது சாய்ந்து விட்டது. இவை தவிர, அஸ்ஸாமில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பல இடங்களில் கான்கிரீட் பெயா்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தால் வீடுகளைவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், பீதியில் வீதிகளில் தஞ்சம் அடைந்தனா்.

அருணாசல பிரதேசத் தலைநகா் இடா நகரில் சில இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி, அலிபுவாா்துவாா், கூச் பிகாா், டாா்ஜீலிங், மணிப்பூா் தலைநகா் இம்பால், வங்கதேச தலைநகா் டாக்கா, பூடான் தலைநகா் திம்பு ஆகிய இடங்களிலும் நில அதிா்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்கள் உதவி கோருவதற்காக, 1070, 1077 ஆகிய அவசர தொலைபேசி எண்களை மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

முதல்வருடன் மோடி, அமித் ஷா பேச்சு: அஸ்ஸாம் முதல்வா் சா்வானந்த சோனோவாலுடன் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவா்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பாதிப்பு விவரங்களைக் கேட்டறிந்தனா். மத்திய அரசு சாா்பில் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமா் மோடி உறுதியளித்தாா்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு காங்கிரஸ் தொண்டா்களை கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT