இந்தியா

தமிழகத்தில் 7.25 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: தமிழக எம்.பி.க்கு மத்திய அமைச்சர் பதில்

 நமது நிருபர்

பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டங்களின் கீழ் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 7.25 லட்சம் வேலையற்ற இளைஞர்களின் திறன் செயல்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
 இந்தத் திட்டங்களுக்கு தமிழகத்துக்கு ரூ. 237.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடப்பாண்டு ஜூலை 10-ஆம் தேதி வரை ரூ.68.86 கோடி வழங்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து கடலூர் தொகுதி திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் கேட்ட கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில்: இந்திய இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதே திறன் இந்தியா திட்டத்தின் நோக்கமாகும். திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள திறன் இந்தியா திட்டத்தில் பிரமரின் திறன் மேம்பாட்டு திட்டம் முன்னெடுத்து வரப்படுகிறது. இதன் கீழ், எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்பத்தில் மேம்படுத்தல், தொழில் பதிப்பு 4.0 ஆகியவற்றில் இளைஞர்களைத் தயார்படுத்தலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 இவர்களுக்காக திறன் குழுக்கள் மூலம் புதிய மற்றும் வளர்ந்து வரும் எண்ம தொழில்நுட்பங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. இதில் திறன் கையகப்படுத்தல், அறிவு விழிப்புணர்வு வாழ்வாதார ஊக்குவிப்பு போன்ற திட்டங்களையும் உலக வங்கி உதவியுடன் திறன் மேம்பாடு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
 அனைவரையும் உள்ளடக்கிய திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ஏற்கெனவே தமிழக அரசு சமர்ப்பித்த மாநிலத் திட்டத்துக்கு ஏற்ப மத்திய அரசு நிதியை ஒதுக்கியுள்ளது.
 தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் படிக்காத இளைஞர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், சில்லறை விற்பனை, கட்டுமானம், தானியங்கி, பிளம்பிங், ஆரோக்கியம், ஊடகம், தொலைத்தொடர்பு போன்றவற்றில் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
 இவற்றில் தமிழகத்தில் 32 மாவட்டங்களில் 7,25,184 இளைஞர்கள் பயிற்சியை பெற்றுள்ளனர். சென்னை (94,686), வேலூர் (67,951), காஞ்சிபுரம் (55, 853), கோவை (46,188) ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயனடைந்துள்ளனர். கடலூரில் 13,498 பேர் பயிற்சியைப் பெற்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT