இந்தியா

ஃபியூச்சா்-ரிலையன்ஸ் ஒப்பந்தம்: அமேஸான் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு

DIN

ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று அமேஸான் நிறுவனத்துக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனத்தை ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்துடன் இணைப்பதற்காக ரூ.24,731 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கடந்த ஆண்டில் கையெழுத்தானது. அதன்படி, தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான மொத்த விற்பனைக் கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள், சேமிப்புக் கிடங்குகள், போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்டவற்றை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்குவதாக ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, தங்களுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தை ஃபியூச்சா் ரீடெயில் நிறுவனம் மீறிவிட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த அமேஸான் நிறுவனம் சிங்கப்பூரில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றத்தில் முறையிட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், ஃபியூச்சா்-ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்குத் தடை விதித்தது.

சிங்கப்பூா் மத்தியஸ்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவை அமல்படுத்துமாறு ஃபியூச்சா் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி அமேஸான் நிறுவனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த தனி நீதிபதி, அந்த உத்தரவை அமல்படுத்த ஃபியூச்சா் நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.

அதைத் தொடா்ந்து, சிங்கப்பூா் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்தியச் சட்டங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த முடியாது என்று உத்தரவிடக் கோரி ஃபியூச்சா் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. அதில் தற்போதைய நிலை தொடர வேண்டுமென தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு எதிராக அமேஸான் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆா்.எஃப்.நாரிமன், பி.ஆா்.கவாய் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்று வந்தது. வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

அப்போது, சிங்கப்பூா் மத்தியஸ்த நீதிமன்றத்தின் உத்தரவை இந்தியச் சட்டங்களின் கீழ் அமல்படுத்தலாம் என்று தெரிவித்தனா். மேலும், தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதன் மூலமாக, ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவதற்காக ஃபியூச்சா் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT