முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஆக.15 முதல் மும்பை புறநகர் ரயில்களில் அனுமதி
மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வருகிற ஆகஸ்ட் 15 முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் வருகிற ஆகஸ்ட் 15 முதல் மும்பை புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இதன்படி இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் புறநகர் ரயில்களில் பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு புறநகர் ரயில்களில் அனுமதி குறித்து ஏற்கெனவே ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:
நாங்கள் இப்போது சில தளர்வுகளை வழங்குகிறோம், ஆனால் பாதிப்பு அதிகரித்தால், மீண்டும் பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டியிருக்கும். மற்றொரு கரோனா அலை வந்துவிடாமல் தடுக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.
இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மும்பையில் புறநகர் ரயில்கள் ஆகஸ்ட் 15 முதல் பயணிக்கலாம். இதன்படி அறிமுகப்படுத்தப்படும் ஒரு செயலி மூலமாக பாஸ் எடுத்துக்கொண்டு மக்கள் ரயிலில் பயணிக்கலாம்.
ஸ்மார்ட்போன் இல்லாத பயணிகள் நகரத்தில் உள்ள நகராட்சி வார்டு அலுவலகங்கள் மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் இருந்து புகைப்படத்துடன் கூடிய பாஸ் எடுக்கலாம். இந்த பாஸ்கள் உள்ளூர் பயணத்திற்கானவை.
இதில் க்யூ.ஆர். குறியீடுகள் இருக்கும், இதனால் ரயில்வே நிர்வாகம் அவர்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியும். சட்டவிரோதமாக யாரையும் பாஸ் பெற அனுமதிக்கக் கூடாது. முழுமையாக தடுப்பூசி போட்டுவிட்டு பயணம் செய்யுங்கள் என்றார்.