முகப்பு
இந்தியா

"டான்ஜெட்கோ'வுக்கு மத்திய அரசு ரூ. 26,428 கோடி கடனுதவி

கரோனா தொற்று காரணமாக எழுந்த பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு (டான்ஜெட்கோ) ரூ. 26,428 கோடி நீண்ட கால கடன் அளிக்கப்பட்டதாக

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
பகிர்:

கரோனா தொற்று காரணமாக எழுந்த பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு (டான்ஜெட்கோ) ரூ. 26,428 கோடி நீண்ட கால கடன் அளிக்கப்பட்டதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு மாநில அரசு கோரிய நிதியுதவியை மத்திய அரசு வழங்கியதா? அதன்விவரம், தமிழகம் உள்ளிட்டு நாடு முழுவதும் மின் நிறுவனங்களின் நிதி ஆதாரங்களைப் பெருக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஆகியவை குறித்து மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் கேள்வி எழுப்பினார்.
 இதற்குப் பதிலளித்து மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கூறியதாவது:
 தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்தின் திட்டங்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு கடன் அளிக்கப்படுகிறது. கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை மத்திய அரசின் நிறுவனமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிட். (பிஎஃப்சி) நிறுவனம் ரூ. 34,936.64 கோடியும், ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் லிட். (ஆர்இசி) ரூ. 36,970 கோடி வரையிலும் கடன் அளித்துள்ளது. இந்த வகையில் மொத்தம் ரூ. 71,906.64 கோடி கடன் நிலுவையில் உள்ளது.
 இந்த நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான நிறுவனத்துக்கு கரோனா தொற்று காரணமாக எழுந்த பணப்புழக்கச் சிக்கல்களைத் தீர்க்க, நீண்ட காலக் கடனுதவித் திட்டத்தின் கீழ், பிஎஃப்சி, ஆர்இசி மூலம் ரூ.26,428 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 மேலும், மற்றோரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தமிழகத்தில் சூரிய எரிசக்தி உற்பத்தியில் 2019-20-இல் 6,447 மெகாவாட்டாக இருந்தது. இது, 2020-21-இல் 5,457 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இதேபோல், காற்றாலை மின் உற்பத்தியிலும் 2019-20-ஆம் ஆண்டை விட 2020-21-இல் 32 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.