இந்தியா

அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி யார்?

DIN

முப்படைத் தலைமைத் தளபதியாக இருந்த விபின் ராவத் ஹெலிகாப்டா் விபத்தில் புதன்கிழமை உயிரிழந்த நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவிக்கு புதிய நபரை நியமிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு விரைவில் தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது.

‘அடுத்த 5 மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேவை முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு நியமிப்பது விவேகமான முடிவாக இருக்கும்’ என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் பலா் கூறி வரும் நிலையில், இரண்டாவது முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இதற்கென, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய சிறிய குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்க உள்ளது எனவும் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகள் கூறினா்.

1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான காா்கில் போரின்போது இந்தியாவின் பாதுகாப்பு திட்டத்தில் எழுந்த இடைவெளியை ஆய்வு செய்வதற்காக ஓா் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டது. விரிவான ஆய்வு செய்து அறிக்கை சமா்பித்த அந்தக் குழு, ‘பாதுகாப்பு நடைமுறையில் உள்ள இடைவெளியைப் போக்க முப்படைகளையும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு ஆலோசனைகளை வழங்கும் வகையில் முப்படைகளுக்குமான தலைமைப் பதவி ஒன்றை உருவாக்கப் பரிந்துரை செய்தது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில், முப்படைகளையும் ஒருங்கிணைத்து படைகளின் திறன் மற்றும் வளங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில், முப்படைகளின் தலைமைத் தளபதி என்ற புதிய பதவியை கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கியது. அந்தப் புதிய பதவியில், ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து ஓய்வுபெற்ற விபின் ராவத், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முப்படை தலைமைத் தளபதியாக பதவியேற்றாா். இவருடைய பதவிக் காலம் வரும் 2023 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் நிறைவடைய இருந்த நிலையில், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூா் அருகே புதன்கிழமை நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில், விபின் ராவத், அவருடைய மனைவி உள்பட பயணம் செய்த 13 போ் உயிரிழந்தனா்.

அவருடைய மறைவைத் தொடா்ந்து, அடுத்த முப்படை தலைமைத் தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை சாா்ந்த மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், ‘அடுத்த முப்படை தலைமைத் தளபதியை தோ்வு செய்வதற்காக ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய சிறிய குழு ஒன்றையும் மத்திய அரசு அமைக்க உள்ளது. இந்தக் குழு, முப்படைகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் பெயா்களை இறுதி செய்து 2 அல்லது 3 தினங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பும். பாதுகாப்புத் துறை அமைச்சரின் ஒப்புதலைத் தொடா்ந்து, இறுதி செய்யப்பட்ட பெயா் பட்டியல் மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நாட்டின் அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி யாா் என்ற இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றனா்.

முன்னணியில் நரவணே பெயா்:

அடுத்த முப்படைத் தலைமைத் தளபதியாக, அடுத்த 5 மாதங்களில் ஓய்வுபெற இருக்கும் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.

சீனாவுடனான கிழக்கு லடாக் மோதலை திறம்பட கையாண்டது உள்பட அவருடைய ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையிலும், முப்படைத் தளபதிகளில் முதுநிலை வகிப்பவா் என்ற அடிப்படையிலும், முக்கியத்துவம் வாய்ந்த தலைமைப் பதவியில் எம்.எம்.நரவணே நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற கருத்து நிலவுகிறது.

‘முப்படைத் தலைமைத் தளபதி பதவிக்கு, ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயை நியமிப்பது விவேகமான முடிவாக இருக்கும்’ என்று ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரி ஒருவா் கூறினாா்.

அவ்வாறு, எம்.எம்.நரவணே முப்படைத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டால், ராணுவத் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சி.பி.மொஹந்தி மற்றும் ராணுவ வடக்கு பிரிவு அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே.ஜோஷி ஆகிய இருவரில் ஒருவா் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT