நடுவானிலேயே பாதையை மாற்றும் திறன் கொண்ட பிரலே ஏவுகணை; சோதனை வெற்றி
பிரித்வி பாதுகாப்பு வாகனத்தை அடிப்படையாக கொண்டு, திட எரிபொருளின் மூலம் இயங்கும் பிரலே ஏவுகணையை போர் காலத்தில் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வடிவமைத்துள்ளது.
நிலத்தில் குறுகிய தூரத்தில் உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் பிரலே ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே இந்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பிரித்வி பாதுகாப்பு வாகனத்தை அடிப்படையாக கொண்டு, திட எரிபொருளின் மூலம் இயங்கும் பிரலே ஏவுகணையை போர் காலத்தில் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வடிவமைத்துள்ளது.
ஏபிஜே அப்துல் கலாம் தீவில் காலை 10:30 மணி அளவில் ஏவுகணை சோதிக்கப்பட்டதாகவும் அனைத்து நோக்கங்களையும் இந்த சோதனை பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட தகவலில், "நிலத்திலிருந்து நிலத்தில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது பிரலே ஏவுகணை. இடை மறிக்கும் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையிலும் இந்த ஏவுகணை மேம்படுத்தப்பட்டுள்ளது. நடுவானில் குறிப்பிட்ட தூரத்தை எட்டியவுடன், தனது பாதையை மாற்றியமைக்கும் திறனையும் இந்த ஏவுகணை கொண்டுள்ளது.
இதையும் படிக்க | இரண்டு மாதங்களுக்கு பின்னர் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
கடற்கரையோரம் அருகே ஏவுகணை செல்லும் பாதையை கண்காணிப்பு கருவிகள் கண்காணித்துவருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 500 முதல் 1,000 கிலோ வரையிலான எடையை தாங்கி செல்லும் பிரலே ஏவுகணை 350 முதல் 500 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
சோதனை வெற்றிபெற்றதற்கு பாராட்டு தெரிவித்த பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், குறிப்பிடத்தகுந்த மைல்கல்லை இன்று எட்டியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.