இந்தியா

'ரைட்டர்' பேசும் அரசியல்: காவல்துறைக்கு வேண்டுமா சங்கம்? - திரைவிமர்சனம்

கி.ராம்குமார்

காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு சங்கம் வைக்க போராடி வரும் ஒரு காவலரும், பொய் வழக்கில் காவல்துறையிடம் சிக்கிக் கொள்ளும் இளைஞனும் சந்தித்துக் கொள்ளும் புள்ளிதான் ரைட்டர் திரைப்படம்.

இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் ஹரிகிருஷ்ணன், இனியா, திலீபன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள ரைட்டர் திரைப்படம் பேச முயற்சித்திருக்கும் செய்தி அவசியமானது.

காவல்துறையினருக்கு சங்கம் வைக்கும் கோரிக்கையை முன்வைத்ததால் பணியிட மாற்றம் பெற்ற சமுத்திரக்கனியால் பொய் வழக்கில் சிக்கிக் கொள்ளும் இளைஞர் அந்த வழக்கில் இருந்து மீண்டாரா இல்லையா என்பதே கதை. அதற்கேற்றவகையில் காட்சிகளை சுவாரஸ்யமாக கடத்தியிருக்கிறது பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு. காட்சிக்குத் தேவையான நில அமைப்பை சரியாக காட்டி படத்திற்கு பக்கபலமாக செயல்பட்டுள்ளார்.

சமுத்திரக்கனி என்றால் நமக்கு பதிந்துபோன நேர்மையின் சிகரம் என்கிற பிம்பத்தை படத்தில் தனக்கு தேவையான அதேசமயம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர் பிராங்கிளின். காட்சிக்கு காட்சி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி. அப்பாவி இளைஞராக நடித்துள்ள ஹரிகிருஷ்ணா ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நேர்மையாக செயல்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் கெஞ்சுவதாகட்டும், தனது அண்ணனிடம் முரண்டு பிடிப்பதாகட்டும் அவர் செலுத்திய உழைப்பு மிகச்சரியாக திரைக்கு வந்திருக்கிறது.

ஒரு காட்சியில் மட்டும் வரும் போஸ் வெங்கட் தொடங்கி ஜி.எம்.சுந்தர், காவலர்களாக வரும் கவிதா பாரதி, இனியா, திலீபன், காவல்துறை உயரதிகாரி என மொத்த படக்குழுவும் தங்களுடைய பங்களிப்பை முழுவதுமாக சிறப்பாக வழங்கியுள்ளனர். இறுக்கமாக செல்லும் இடங்களில் நடிகர் ஆண்டனி ஸ்கோர் செய்கிறார். அவரை அதிகம் பயன்படுத்திக் கொள்ளாதது தமிழ் சினிமாவின் குறை. பாடல்கள் கேட்க கேட்க பிடிக்கும் ரகம்.

“அதிகாரத்துல இல்லாத எல்லா போலிஸும் அடியாள் தான்”, படிச்சா மேலத்தெருக்காரனாக முடியுமானு தெரியல, ஆனா மேல போகலாம்” போன்ற வசனங்கள் சிறப்பு.

படத்தின் பலமே திரைக்கதை உருவாக்கம். எளிதில் யூகிக்கக்கூடிய காட்சிகள் இருந்தாலும் அதனை ரசிகர்களுக்கு தொய்வு ஏற்படாதவகையில் கொண்டு சேர்த்திருக்கிறது படக்குழு.

சில இடங்களில் காட்சிகளை விளக்குவதில் இன்னும் கூடுதலாக மெனக்கெட்டிருக்கலாம். குறிப்பாக ஹரிகிருஷ்ணா பொய் வழக்கிற்குள் சிக்கிக் கொள்ளும் இடங்களுக்கும், காவல்துறைக்கு ஏன் சங்கம் வேண்டும்? என்பதை விளக்கவும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாமோ எனத் தோன்றாமல் இல்லை. எனினும் அடுத்தடுத்த காட்சிகளின் ஓட்டம் அதனை கடந்து செல்ல உதவுகிறது.

காவல்துறையே காவல்துறையின் கருப்பு பக்கங்களை பேசும் வகையில் திரைக்கதையை அமைத்து சொல்ல சாதுர்யமாக செயல்பட்டுள்ள இயக்குநருக்கு பாராட்டுகள்.  

சமுத்திரக்கனிக்கு குறிப்பிட்டுச் சொல்ல வாய்ப்பளித்திருக்கும் திரைப்படம் “ரைட்டர்”. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT