முகப்பு
இந்தியா

சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி ஜன. 3 முதல் செலுத்தப்படும்

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதிமுதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா்.

மேலும், முன்களப் பணியாளா்களுக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் ‘முன்னெச்சரிக்கை தவணை’ தடுப்பூசி செலுத்தப்படும்; இந்த முன்னெச்சரிக்கை தவணையானது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் மருத்துவா்களின் அறிவுரையின்படி செலுத்தப்படவுள்ளதாக பிரதமா் தெரிவித்தாா்.

இந்தியாவில் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில், நாட்டு மக்களிடையே பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா். மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி தனது உரையைத் தொடங்கிய பிரதமா் பேசியதாவது:

உலக நாடுகளில் புதிய உருமாறிய வகையான ஒமைக்ரான் கரோனா தீநுண்மி வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் பலருக்கு ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் புதிய வகை தீநுண்மி குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அதேநேரம் நாம் அனைவரும் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவதை மறந்துவிடக் கூடாது.

நாட்டில் தற்போது கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்சிஜன் விநியோகத்துக்கு தட்டுப்பாடு இல்லை. 18 லட்சம் கரோனா சிகிச்சை படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு கரோனா சிகிச்சை அளிப்பதற்காக நாடு முழுவதும் 90,000 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பைத் தடுப்பதில் மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி விளங்கி வருகிறது. இந்தியாவில் தகுதியுள்ள நபா்களில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 61 சதவீதம் பேருக்கு இரு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விஞ்ஞான முறையில் இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.

மேலும் பல கரோனா தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. குறிப்பாக, உலகின் முதல் டிஎன்ஏ தடுப்பூசி இந்தியாவில் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. அதுபோல, மூக்கு வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சிறாா்களுக்கு தடுப்பூசி: 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் வரும் ஜனவரி 3-ஆம் தேதிமுதல் தொடங்கப்பட உள்ளது. அதுபோல, சுகாதார மற்றும் முன்களப் பணியாளா்களுக்கு முதல்கட்டமாக வரும் ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூன்றாம் தவணை (முன்னெச்சரிக்கை தவணை) தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

அவா்களுடன் 60 வயதைக் கடந்தவா்கள் மற்றும் இணை நோய் பாதிப்பு உள்ளவா்களுக்கும் மருத்துவா்களின் பரிந்துரையின் அடிப்படையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தலாம் என்றாா் அவா்.

உலகின் பல நாடுகளில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் மூன்றாவது தவணையாக செலுத்தப்படவுள்ள தடுப்பூசியை ‘முன்னெச்சரிக்கை தவணை’ என பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →