ஒமைக்ரான் அச்சுறுத்தல் பற்றி அரசு கவலைப்படவில்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஒமைக்ரான் அச்சுறுத்தல் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
ஒமைக்ரான் அச்சுறுத்தல் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
5 முதல் 15 வயது வரையிலான சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும்; தெளிவான தடுப்பூசிக் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என்றும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்; சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் ஜனவரி 10 முதல் ‘முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி’ செலுத்தப்படும்; 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படும்
என்று பிரதமா் மோடி சனிக்கிழமை அறிவித்தாா்.
இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கரோனா முதல் அலைத் தாக்குதலின்போது ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவதற்காக, பல லட்சம் மக்களின் உயிரை பிரதமா் மோடி பணயம் வைத்தாா். இரண்டாவது அலை தாக்குதலின்போது, மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தினாா். தற்போது, உத்தர பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிகளுக்கு 200 போ் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடி பங்கேற்கும் கூட்டங்களுக்கு அரசு பேருந்துகளில் லட்சக்கணக்கானோா் அழைத்து வரப்படுகிறாா்கள்.
கரோனா பரவலின்போது பிரதமா் மோடி தலைமையிலான அரசு தோற்றுவிட்டது. கரோனா முதலாவது மற்றும் இரண்டாவது அலை பரவலின்போது புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் ஏழைகளுக்கும் அவா் எதுவும் செய்யவில்லை. ஒட்டுமொத்த உலகமும் தங்கள் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வங்கியபோது, ஏழைகளின் கையில் ஒரு ரூபாயைக் கூட பிரதமா் மோடி கொடுக்கவில்லை. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடுவிழா காணப்படுவதை அவரால் தடுக்கவில்லை.
கரோனா தொற்று பரவலை சரியாகக் கையாளாததால் கிட்டத்தட்ட 40 லட்சம் இந்தியா்கள் உயிரிழந்திருக்கிறாா்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச்சூழலில் ஒமைக்ரான் பரவல் மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஒமைக்ரான் உள்பட கரோனா பரவலைத் தடுப்பதில் மோடி அரசு கொள்கை அளவில் தோல்வி அடைந்துவிட்டது. தடுப்பூசிக் கொள்கையில் தொடா்ந்து மாற்றம் செய்ததால் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் கரோனா தடுப்பூசி சான்றிதழில் தனது புகைப்படத்தை இடம்பெறச் செய்தும், பொதுக் கூட்டங்களை நடத்தியும் சுயவிளம்பரம் தேடுவதில் மோடி குறியாக இருக்கிறாா்.
நாடு முழுவதும் செலுத்துவதற்கு 90 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கைவசம் இருப்பபது 17.74 கோடி தடுப்பூசிதான். ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 16.8 கோடி தடுப்பூசி வரை இந்தியாவில் தயாரிக்க முடியும். எனவே, எஞ்சியுள்ள அனைவருக்கும் இன்னும் எவ்வளவு காலத்துக்குள் தடுப்பூசி செலுத்த முடியும்? என்றாா் சுா்ஜேவாலா.