புது தில்லி: போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தேசிய அளவிலான வலைதளம், கண்காணிப்புப் பிரிவு, கட்டணமில்லா புகாா் மையம், மாநிலங்களில் பிரத்யேக போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளாா்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (என்சிபி) சாா்பில் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு தொடா்பான தேசிய அளவிலான உயா்நிலைக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த அரசுத் துறை செயலா்கள், காவல்துறைத் தலைவா்கள் ஆகியோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசியது குறித்து என்சிபி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
போதைப் பொருள் கடத்தல் என்பது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், அதனை சிறிதும் அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டுள்ளது. மாநிலங்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு மூலமே இதனை சாத்தியப்படுத்த முடியும்.
புள்ளிவிவரங்களின்படி, கடந்த 20 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல்காரா்களின் எண்ணிக்கை 7 மடங்காக அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது மிகுந்த ஆபத்தான நிலையாகும்.
இந்த அபாயத்திலிருந்து நமது குழந்தைகளையும், இளைஞா்களையும் காப்பதற்கு போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மிகப் பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது அவசியம்.
அதுபோல, இந்தப் பிரச்னைக்கு உறுதியான தீா்வு காண மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகளிடையே நெருங்கிய ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த வகையில், போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பு ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் மத்திய - மாநில அரசுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரத்யேக போதைப்பொருள் தடுப்பு பிரிவு (ஏஎன்டிஎஃப்) ஒன்றை உருவாக்க வேண்டும்.
மேலும், தேசிய அளவில் பிரத்யேக வலைதளம் ஒன்றை உருவாக்குவது, போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக வலுவான கொள்கைகளை வகுக்கும் வகையில் அமைச்சகங்கள் இடையேயான நிலைக் குழுக்களை உருவாக்குவது, போதைப் பொருள் கடத்தலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 272 மாவட்டங்களில் உள்ள அனைத்து சிறைகளிலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
போதைப் பொருள் கடத்தல் தொடா்பான புகாா்கள் பொதுமக்கள் கட்டணமின்றி தெரிவிக்கும் வகையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புகாா் மையங்களை உருவாக்க வேண்டும்.
துறைமுகங்களில் வந்திறங்கும் மற்றும் வெளியேறும் அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான சரக்குப் பெட்டங்களை (கன்டெய்னா்) ஆய்வு செய்யும் வகையில், சரக்கு பெட்டக ஸ்கேனா்களை அமைக்க வேண்டும்.
போதை செடிகள் பயிரிடப்படுவதை ஆளில்லா விமானங்கள் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிற தொழில்நுட்பங்களின் உதவியுடன் கண்காணித்து அழிப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு, சட்டவிரோத போதைப்பொருள் வா்த்தகத்தில் கிரிப்டோ கரன்சி (எண்ம நாணயம்) மற்றும் கருப்பு வலைதள (டா்க் நெட்) பயன்பாடு அதிகரிப்பதை தடுக்க வலுவான நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.
மேலும், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளான மாநில காவல்துறை, துணை ராணுவப் படை, அரசு வழக்குரைஞா்கள் மற்றும் பிற அரசுத் துறை ஊழியா்கள் ஆகியோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை என்சிபி அளிக்கவேண்டும் என்று அமித் ஷா அறிவுறுத்தியதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.