பஞ்சாப்: 5வது வேட்பாளர் பட்டியலில் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தேர்தலில் 20 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மி எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிக்க | இந்தியாவில் மேலும் 2 கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அனைத்து வீடுகளுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரசாரத்தையும் அவர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 15 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர்கள் பட்டிலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.
இதில், தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியின் தொகுதியான ஸ்ரீ சம்கௌர் சாஹிப்பின் ஆம் ஆத்மி வேட்பாளராக சரண்ஜீத் சிங் என்பவர் அறிவித்து முதல்வருக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
முன்னதாக அக்கட்சி வெளியிட்ட, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 10 பேரும், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 30 பேரும், மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 18 பேரும், நான்காம்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.