மகாராஷ்டிராவை சேர்ந்த இந்து மத தலைவரான காளிசரண் மகாராஜ், அண்ணல் காந்தியடிகளை கொலை செய்த நாதுராம் கோட்சேவை பாராட்டும் விதமாக பேசினார். இந்நிலையில், மத்தியப் பிரதேசம் கஜுராஹோவில் சத்தீஸ்கர் காவல்துறை அவரை கைது செய்துள்ளது. அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்திஸ்கர் ராய்ப்பூரில் நடைபெற்ற மதக் கூட்டத்தில் அவர் அண்ணல் காந்தியடிகளை அவமதிக்கும் விதமாக பேசினார். இதன் காரணமாக, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த மஹந்த் ராம்சுந்தர், கோபத்தில் மேடையை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து, மேயர் பிரமோத் துபே அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர், இருப்பிரிவினருக்கிடையே பகைமையை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரை கைது செய்துள்ளதாக ராய்ப்பூரின் மூத்த காவல்துறை அலுவலர் பிரசாந்த் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கஜுராஹோவில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குவதற்காக அவர் புக் செய்துள்ளதாகவும் ஆனால் காவல்துறையை ஏமாற்றும் நோக்கில் கஜுராஹோவிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள வீட்டில் வாடகை எடுத்து தங்கியதாக காவல்துறை வட்டாரங்கள் கூறிகின்றன.
அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்தே, அவரை கைது செய்வதற்காக காவல்துறை தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். காவல்துறையிடமிருந்து தப்பிக்கும் வகையில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் செல்போனை ஆஃப் செய்துள்ளனர். இச்சூழலில், 10 பேர் கொண்ட தனிப்படை அவரை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். பின்னர், ராய்ப்பூருக்கு அழைத்து வந்துள்ளனர்.
இன்று மாலைக்குள், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். விதிமுறைகளை மீறி சத்தீஸ்கர் காவல்துறை அவரை கைது செய்துள்ளதாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம்சாட்டியுள்ளார். உள்ளூர் காவல்துறையிடம் அவர்கள் தகவல் தெரிவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கு சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.