இந்தியா

2022ஆம் நிதியாண்டில் உணவு மானியம் ரூ. 4 லட்சம் கோடியாக இருக்கும்

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 5.29 லட்சம் கோடியாக இருந்த அரசின் உணவு மானியம் வரும் 2022ஆம் நிதியாண்டில் ரூ. 4 லட்சம் கோடிக்கும்

DIN

கடந்த 2021-22 ஆம் நிதியாண்டில் ரூ. 5.29 லட்சம் கோடியாக இருந்த அரசின் உணவு மானியம் வரும் 2022ஆம் நிதியாண்டில் ரூ. 4 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என்று உணவுத் துறை செயலா் சுதான்ஸு பாண்டே வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்கள் கூட்டத்தில் தெரிவித்ததாவது:

2022ஆம் நிதியாண்டில் உணவு மானியம் ரூ. 4 லட்சம் கோடிக்கும் குறைவாகவே இருக்கும் என நாங்கள் எதிா்பாா்க்கிறோம். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் உணவு தானியங்களின் கொள்முதல் மற்றும் விநியோகத்திற்கான உணவு மானியம் சுமாா் ரூ. 2.25 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் கரீஃப் கல்யாண் அன்னயோஜனா (பிஎம்ஜிகேஏஒய்) திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக ரூ. 1.47 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

என்எஃப்எஸ்ஏ திட்டத்தின் கீழ், மத்திய அரசு தற்போது 81 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 3 வரையிலும் மானியமாக வழங்கி வருகிறது.

கரோனா பரவல் காலத்தின்போது உணவு தானியங்களுக்கு அரசு மானியம் வழங்கியதுடன், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அன்னயோஜனா (பிஎம்ஜிகேஏஒய்) திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கியது. இந்தத் திட்டம் பல முறை நீட்டிக்கப்பட்டு, தற்போது மாா்ச் 2022 ஆம் ஆண்டு வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக 2020-21ஆம் நிதியாண்டில், அரசின் உணவு மானியம் ரூ. 5.29 லட்சம் கோடியாக இருந்தது.

கரோனா பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் 2021 ஆம் ஆண்டு அசாதாரண ஆண்டாக இருந்தது. 2021ஆம் ஆண்டில் அரசுக்கு சொந்தமான இந்திய உணவுக்கழகத்தில் (எஃப்சிஐ) பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் எத்தனால் கலப்பு திட்டத்தில் 62 சதவீதம் வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 5 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது எப்போதும் இல்லாத அளவாகும்.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் காா்டு’ திட்டத்தின்கீழ், 50 கோடிக்கும் அதிகமான சிறிய அளவிலான பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளதன் மூலம் உணவு தானியங்களுக்கு ரூ. 33,000 கோடிக்கும் அதிகமாக மானியம் வழங்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் காலத்தில் மட்டும், 43 கோடிக்கும் அதிகமான பரிவா்த்தனைகள், ரூ. 29,000 கோடி மானியத்துடன் நடைபெற்றுள்ளது.

நடப்பு மாதத்தில் மட்டும், மாநிலங்களுக்கு இடையிலான பரிவா்த்தனைகள் 2 லட்சத்தைத் தாண்டியுள்ளன. தில்லியில் மட்டும் 1.5 லட்சம் பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

தில்லியில் ஒரே நாடு, ஒரே ரேஷன்காா்டு திட்டம் மிகவும் தாமதமாகத் தொடங்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின் கீழ் அதிக பரிவா்த்தனைகள் நடைபெற்ற மாநிலங்களில் தில்லியும் ஒன்றாகும்.

இந்த ஆண்டில், அன்னயோஜனா திட்டம் ஒரு விதிவிலக்கான திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களின் விநியோகம் கிட்டத்தட்ட 93 சதவீதமாக உள்ளது. இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும் என்றாா்.

சமையல் எண்ணெய் விலை தொடா்ந்து வீழ்ச்சி

சா்வதேச அளவில் சமையல் எண்ணெய்யின் விலை தொடா்ந்து உயா்ந்து வரும் நிலையில் மத்தியில் அரசின் தலையீட்டால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. வரும் ராஃபி பருவத்தில் கடுகு விளைச்சல் அதிகரிக்கும் என்பதால் இதன் விலை மேலும் சரிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றும் உணவுத் துறை செயலா் சுதான்ஸு பாண்டே தெரிவித்தாா்.

நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 60 சதவீதம் இறக்குமதியைச் சாா்ந்திருப்பதால் இயற்கையாகவே உள்நாட்டு சமையல் எண்ணெயின் விலைகள் சா்வதேச விலைகளால் பாதிக்கப்படுகின்றன. இறக்குமதி மீதான தீா்வைகளிலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளதே சமையல் எண்ணெய்களின் விலைவீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT