முகப்பு
இந்தியா

2020 முதல்நிலைத் தேர்வு வாய்ப்பை இழந்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு: யுபிஎஸ்சி சம்மதம்

கரோனா பரவல் காரணமாக கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது. 

Updated On : 5 பிப்ரவரி, 2021 at 4:33 PM
யுபிஎஸ்சி
பகிர்:

கரோனா பரவல் காரணமாக வயது வரம்பின் அடிப்படையில் கடந்த முறை வாய்ப்பை இழந்த யுபிஎஸ்சி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கும் மத்திய அரசின் பரிந்துரையை யுபிஎஸ்சி ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களை நிரப்புவதற்கான 2020-21 ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு, திட்டமிட்டதற்கு 4 மாதங்கள் கால தாமதமாக 2020 அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

ஆனால், கரோனா பரவல் காரணமாக முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்க வேண்டுமென்று ரச்னா சிங் என்ற தோ்வர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே யுபிஎஸ்சி திட்டமிட்டபடி தேர்வு நடத்தியது. அதைத்தொடர்ந்து முதன்மைத் தேர்வுகளும் கடந்த மாதம் நிறைவுற்றன. 

Advertisement

இதையடுத்து, வயது வரம்பின் அடிப்படையில் 2020-ஆம் ஆண்டுடன் யுபிஎஸ்சி தோ்வை எழுதுவதற்கான கடைசி வாய்ப்பை இழந்தவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பு வழங்குவது தொடா்பாகப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கும் யுபிஎஸ்சி-க்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தது.

நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், பி.ஆா்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தின் பரிசீலனையை மத்திய அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட நிலையில், தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி-யும் ஏற்றுக்கொண்டுள்ளதாக இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு வாய்ப்பை இழந்தவர்களுக்கு நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

2021-22 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு குறித்த அறிவிப்பு வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.