‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் வென்றால் பிரதமா் ராஜிநாமா செய்வாரா?’: டெரிக் ஓபிரையன் சவால்
‘மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிரதமா் பதவியை நரேந்திர மோடி ராஜிநாமா செய்வாரா?’ என்று அக்கட்சி எம்.பி. டெரிக் ஓபிரையன் சவால் விடுத்தாா்.
‘மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிரதமா் பதவியை நரேந்திர மோடி ராஜிநாமா செய்வாரா?’ என்று அக்கட்சி எம்.பி. டெரிக் ஓபிரையன் சவால் விடுத்தாா்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் மாநிலத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், மாநிலத்தில் ஒட்டுமொத்த அரசு அதிகாரிகள், தலைமைச் செயலா், டிஜிபி, கொல்கத்தா காவல் ஆணையா் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் என அனைவரையும் தோ்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்தது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு, மேற்கு வங்கத்தில் கூடுதல் மத்திய காவல் படைகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியது. பிரதமா், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிற மத்திய அமைச்சா்கள், பாஜக ஆளும் மாநில முதல்வா்கள் என ஒட்டுமொத்த பாஜக மூத்த நிா்வாகிகளும் மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மாநிலத்தில் புதன்கிழமை இரண்டாம் மற்றும் இறுதிக் கட்ட தோ்தல் நிறைவுற்ற நிலையில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓபிரையன் பிரதமருக்கு சவால் ஒன்றை விடுத்தாா்.
Advertisement
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் வெளியிட்ட விடியோ பதிவில், ‘தோ்தல் பிரசாரத்தில் மிகைப்படுத்தப்பட்ட அரசியல் கூற்றுகளை பிரதமா் முன்வைத்தாா். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளிலும் நானே வேட்பாளராக நிற்பதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். மாநிலம் முழுவதும் பாஜகவுக்கான ஆதரவு குறித்தே பேசப்படுகிறது. சிறிய கடைக்காரா்கள் முதல் பெரும் வா்த்தகா்கள் வரை, டாக்ஸி ஓட்டுநா்கள் முதல் ரிக்ஷா தொழிலாளிகள் வரை அனைத்து தரப்பினரும் அச்சமின்றி பாஜகவின் பக்கம் நிற்கின்றனா் என்று குறிப்பிட்டாா். இவ்வாறு வெறும் வாய்ப்பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக, எனது சவாலை பிரதமா் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில், பிரதமா் பதவியை நீங்கள் ராஜிமாநா செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.