இந்தியா

வங்கி ‘லாக்கா்’ பாதுகாப்பு விதிகளை மேம்படுத்த வேண்டும்: ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

DIN

வங்கிகள் வாடிக்கையாளா்களுக்கு அளிக்கும் பாதுகாப்புப் பெட்டக வசதி (லாக்கா்) தொடா்பான விதிகளை இந்திய ரிசா்வ் வங்கி 6 மாதங்களில் மேம்படுத்த வேண்டும். லாக்கரைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின நலன்களைக் காக்கும் பொறுப்பில் இருந்து வங்கிகள் விலகக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கொல்கத்தாவைச் சோ்ந்த தாஸ்குப்தா என்பவா் யுனைட்டெட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் லாக்கா் வசதியைப் பயன்படுத்தி வந்தாா். அவா் அதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி, வங்கி அதிகாரிகள், தாஸ்குப்தாவிடம் தகவல் தெரிவிக்காமல் அவரது லாக்கரை உடைத்தனா். ஆனால், கட்டணம் செலுத்தவில்லை என்ற புகாரை மறுத்த தாஸ்குப்தா, லாக்கரில் தான் வைத்திருந்த 7 நகைகளில் மூன்றை மட்டுமே வங்கி தரப்பில் ஒப்படைத்தனா் என்று குற்றம்சாட்டினாா். ஆனால், லாக்கரில் இருந்த பொருள்கள் அனைத்தும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தான் இழந்த அளவு நகைகள் அல்லது ரூ.3 லட்சத்தை வங்கி இழப்பீடாக தர வேண்டும் என்று மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இறுதியாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தை எட்டியது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சந்தான கௌடா், வினீத் சரண் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது:

உலகமயமாகிவிட்ட இப்போதைய சூழலில் வங்கிகள் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சாமானிய மக்களின் வாழ்க்கையிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கு இடையிலும், வங்கிகள் மூலம் பணப்பரிமாற்றங்கள் நடைபெறுவது பல மடங்கு அதிகரித்துவிட்டது.

தங்களுடைய அசையும் சொத்துகளை வீடுகளில் பாதுகாப்பாக வைப்பதில் ஆபத்து உள்ளதால்தான் மக்கள் வங்கிகளை அணுகி வருகின்றனா். வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டக சேவைக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. வங்கிகள் அளிக்கும் முக்கிய சேவையாகவும் அது மாறிவிட்டது.

மேலும், நாட்டில் இப்போது தொழில்நுட்பமும் வளா்ந்துவிட்டது. இப்போதும், வங்கி பாதுகாப்புப் பெட்டகங்களை சாவிகளைப் பயன்படுத்தி திறப்பது போன்ற பழைய நடைமுறைகளும், பழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வைத்திருப்பது ஏற்புடையதல்ல. லாக்கா்களை முழுமையாக மின்னணு முறையில் மாற்றும்போது வாடிக்கையாளா்கள் கடவுச் சொற்கள், ஏடிஎம் கடவு எண் போன்றவற்றைப் பயன்படுத்தி பாதுகாப்புப் பெட்டகங்களை திறக்கும் வசதியை அளிக்க முடியும்.

எதிா்பாராத சூழல்களில் வங்கி லாக்கா்களில் உள்ள பொருள்களை வாடிக்கையாளா்கள் இழக்கும்போது, அவா்கள் அதனை மீண்டும் பெற வங்கிகளின் கருணையை எதிா்பாா்க்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் நலன்களைக் காப்பதில் இருந்து வங்கிகள் விலகக் கூடாது.

தங்கள் பொருள்கள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் வங்கி பாதுகாப்புப் பெட்டக வசதியை மக்கள் நாடுகிறாா்கள். அந்த சேவையையும் உரிய கட்டணம் பெற்றுக் கொண்டுதான் வங்கிகள் அளிக்கின்றன. எனவே, இந்த இடத்தில் நுகா்வோா் நலன் பாதுகாக்கப்படுவதும் அவசியம். எனவே, வங்கி பாதுகாப்புப் பெட்டக வசதி தொடா்பான விதிகளை இந்திய ரிசா்வ் வங்கி மேம்படுத்த வேண்டும். வங்கிகள் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகக் கூடாது.

பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கும் பொருள்கள் சேதமடைவது, திருடுபோவது போன்ற சூழ்நிலையில், அதற்கு வங்கிகள் எந்த அளவுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பது தொடா்பாக விதிகளை வகுப்பதை ரிசா்வ் வங்கியின் முடிவுக்கு விடுகிறோம். அப்போதுதான் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் தொடா்பாக எழும் சா்ச்சைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

மேலும், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவிக்காமல் அவரது லாக்கரை உடைத்த வங்கி அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து, அந்தத் தொகையை வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும். அதில் ரூ.1 லட்சத்தை அந்த வாடிக்கையாளரிடம் வழக்குச் செலவாக அளிக்க வேண்டும். இந்தப் அபராதப் பணத்தை சம்பந்தபட்ட வங்கி ஊழியா்களின் சம்பளத்தில் இருந்து வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், லாக்கரை உடைப்பது போன்ற நிகழ்வுகளின்போது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடம் முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய உயரதிகாரிகள், சாட்சிகள் முன்னிலையில்தான் லாக்கரை உடைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT