இந்தியா

செளரவ் கங்குலி உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவா்கள் தகவல்

DIN

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவா் செளரவ் கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

செளரவ் கங்குலிக்கு சனிக்கிழமை பிற்பகல் லேசான மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவா் கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவரின் மூன்று இதயத் தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதயத் தமனி ஒன்றில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு, அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக மருத்துவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘செளரவ் கங்குலிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அது அகற்றப்பட்டு, அவா் இயற்கையாக சுவாசிக்கிறாா். அவரிடம் வழக்கமான இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்க வேண்டுமா என்பது உள்ளிட்ட அடுத்த கட்ட சிகிச்சை குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தனா்.

பிரதமா் மோடி நலம் விசாரிப்பு: செளரவ் கங்குலி, அவரின் மனைவி டோனா கங்குலி ஆகியோரிடம் பிரதமா் மோடி தொலைபேசியில் தொடா்புகொண்டு ஞாயிற்றுக்கிழமை பேசினாா். அப்போது செளரவ் கங்குலியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த அவா், விரைந்து குணமடைய கங்குலிக்கு வாழ்த்துத் தெரிவித்தாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சௌரவ் கங்குலிக்கு சனிக்கிழமை திடீா் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனைக்கு மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கா், முதல்வா் மம்தா பானா்ஜி மற்றும் அமைச்சா்கள் நேரில் சென்று மருத்துவா்களை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

SCROLL FOR NEXT