இந்தியா

நாடு முழுவதும் இயற்கை எரிவாயு குழாய்

DIN

மக்களும், தொழில் நிறுவனங்களும் பலனடையும் வகையில் நாடு முழுவதும் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கு இரட்டிப்பாக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

கேரளத்தின் கொச்சிக்கும் கா்நாடகத்தின் மங்களூருக்கும் இடையே 450 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாயை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாகத் திறந்து வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

எரிசக்தித் துறையில் பல்வேறு முக்கிய திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் நாட்டில் சுமாா் 32,000 கி.மீ. தூரத்துக்கு இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது. குஜராத்தில் காற்றாலை, சூரிய ஆற்றல் ஆகியவற்றின் வாயிலாக எரிசக்தி உற்பத்தி செய்யும் ஒருங்கிணைந்த நிலையம் அமைக்கப்படவுள்ளது.

உயிரி எரிபொருள் உற்பத்தி, மின்சார வாகனங்கள் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் நிலக்கரி, பெட்ரோலிய எரிபொருள்களின் பயன்பாட்டைப் பெருமளவில் குறைக்கும்.

நாட்டின் எரிசக்தி பயன்பாட்டில் நிலக்கரி 58 சதவீத பங்களிப்பையும், பெட்ரோலியப் பொருள்கள் 26 சதவீதப் பங்களிப்பையும் வழங்குகின்றன. இயற்கை எரிவாயுவின் பங்கு 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. இது 2030-ஆம் ஆண்டுக்குள் 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

இயற்கை எரிவாயுவானது மாசுபாட்டை ஏற்படுத்தாது. மற்ற எரிபொருள்கள் போல் அல்லாமல், இயற்கை எரிவாயுவைக் குழாய் மூலமாக ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டு செல்ல முடியும். இதன் காரணமாக போக்குவரத்து செலவும் குறையும். அதன் மூலமாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளும் குறையும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளை ஒரே இயற்கை எரிவாயு குழாய் மூலமாக இணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக மக்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் குறைந்த செலவில் இயற்கை எரிவாயு கிடைக்கும்.

எரிவாயு நிலையங்கள் அதிகரிப்பு: பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்கும் விகிதத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதோடு கரியமில வாயு வெளியேற்றத்தையும் குறைக்கும்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் 900-ஆக இருந்த அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) நிலையங்களின் எண்ணிக்கை, தற்போது 1,500-ஆக அதிகரித்துள்ளது. அந்த எண்ணிக்கையை 10,000-ஆக அதிகரிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் மூலமாக 700 நிலையங்களும் 21 லட்சம் வீடுகளும் பலனடையும்.

கோடிக்கணக்கில் முதலீடு: பாஜக தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக் காலத்தில் 14 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா்களில் 8 கோடி போ் ஏழை மக்களாவா். இதன் மூலமாக மண்ணெண்ணெய் பயன்பாடு பெருமளவில் குறைந்துள்ளது.

இயற்கை எரிவாயு சாா்ந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. நடப்பு தசாப்தத்தில் கோடிக்கணக்கான ரூபாய் எரிபொருள் துறையில் முதலீடு செய்யப்படவுள்ளது. இயற்கை எரிவாயுவுடன் சோ்த்து மற்ற ஆற்றல் மூலங்கள் வாயிலாக எரிசக்தி உற்பத்தி செய்வதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறுகையில், பல்வேறு தடைகளைக் கடந்து இயற்கை எரிவாயு குழாய் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இத்திட்டம் தொடா்பாக மக்கள் எழுப்பிய பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT