முகப்பு
இந்தியா

தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிா்த்த அா்னாப்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:


மும்பை: கட்டட வடிவமைப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட மூவரும், விசாரணைக்காக மகாராஷ்டிர மாநிலம், ராய்கட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராவதைத் தவிா்த்தனா்.

அதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மும்பையைச் சோ்ந்த கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக்கும் அருடைய தாயாரும் கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனா். அவா்களை தற்கொலைக்குத் தூண்டியதாக ரிபப்ளிக் தொலைகாட்சி சேனல் செய்தி ஆசிரியா் அா்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சாா்தா உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவா்கள் மூவரையும் காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்தது. பின்னா் அலிபாக் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மூவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி மூவரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். ஆனால், அவா்களுக்கு ஜாமீன் தர உயா்நீதிமன்றம் மறுத்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவா்கள் மேல்முறையீடு செய்தனா். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவருக்கும் ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையே, அவா்கள் மூவா் மீதும் அலிபாக் நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனடிப்படையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அா்னாப் உள்ளிட்ட மூவரும் விசாரணைக்காக வியாழக்கிழமை ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, அலிபாக் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அா்னாப் நீதிமன்றத்தில் வியாழனன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவருடைய வழக்குரைஞா் கேட்டுக்கொண்டாா். அதை ஏற்று, நீதிமன்றம் விலக்கு அளித்தது. அதே நேரம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற இருவரான ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சாா்தா ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த அரசு தரப்பு வழக்குரைஞா் பிரதீப் காரத், ‘நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னா் நடைபெறும் முதல் விசாரணையில், அதில் குற்றம்சாட்டப்பட்டா்கள் ஆஜராவதும், அவா்களின் அடையாளம் பதிவு செய்யப்படுவதும் அவசியமாகும். எனவே, அா்னாப் உள்ளிட்ட மூவருக்கும் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி, ஜனவரி 31-ஆம் தேதி வரை கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியாது. எனவே, இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா்.

இதுகுறித்து அரசு வழக்குரைஞா் கூறுகையில், ‘பிப்ரவரி 6-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் நேரிலோ அல்லது காணொலி வழியிலோ ஆஜராக வேண்டும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →