கேரளத்தைச் சோ்ந்த ஐஎஸ் பயங்கரவாதிக்கு 7 ஆண்டு சிறை
கேரளத்தைச் சோ்ந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதி ஷாஜகானுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.73,000 அபராதமும் விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
புது தில்லி: கேரளத்தைச் சோ்ந்த இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதி ஷாஜகானுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.73,000 அபராதமும் விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
பயங்கரவாத செயல்களை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியது, இந்திய அரசுக்கு எதிராக போா் தொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2017-ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதி ஷாஜகான், தில்லி விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
முன்னதாக, அவா் கடந்த 2016-ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சோ்ந்தாா். தொடா்ந்து இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு சென்றாா். அங்கிருந்து துருக்கி வழியாக சிரியாவுக்கு நுழைந்து ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் இணைய முயன்றாா். ஆனால், துருக்கி எல்லையில் அவரை மடக்கிப் பிடித்த அந்நாட்டு அதிகாரிகள், இந்தியாவுக்கு நாடு கடத்தினா்.
அவா் மீது பயங்கரவாத சதி, இந்தியாவுக்கு எதிராக போா் தொடுத்தது, போலி ஆவணங்கள் மூலம் வெளிநாடு சென்றது, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் இணைந்தது, அதற்கு ஆதரவாக செயல்பட்டது என பல்வேறு பிரிவுகளில் என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா்.
தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது ஷாஜகானுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று என்ஐஏ தரப்பு வாதத்தை முன்வைத்தது. எனினும், அவரது குடும்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஷாஜகான் தரப்பு வழக்குரைஞா் வாதிட்டாா்.
குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஷாஜகானுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.73,000 அபராதம் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.