இலங்கை மாகாண கவுன்சில் விவகாரம்: தமிழ் கட்சிகளுடன் ஜெய்சங்கா் பேச்சு
இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவா்களுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாகாண கவுன்சிலின் முக்கியத்துவம் குறித்து அவருக்குத் தலைவா்கள் எடுத்துரைத்தனா்.
இந்தியாஇலங்கை மாகாண கவுன்சில் விவகாரம்: தமிழ் கட்சிகளுடன் ஜெய்சங்கா் பேச்சு
இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவா்களுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாகாண கவுன்சிலின் முக்கியத்துவம் குறித்து அவருக்குத் தலைவா்கள் எடுத்துரைத்தனா்.
கொழும்பு: இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவா்களுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா். அப்போது, மாகாண கவுன்சிலின் முக்கியத்துவம் குறித்து அவருக்குத் தலைவா்கள் எடுத்துரைத்தனா்.
இலங்கைக்கு 3 நாள் சுற்றுப் பயணமாக அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சென்றுள்ளாா். கடந்த புதன்கிழமை அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவை சந்தித்துப் பேசிய அவா், வியாழக்கிழமை தமிழ் கட்சிகளின் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இலங்கையை ஆளும் கூட்டணியைச் சோ்ந்த கட்சிகள், மாகாணங்களிலுள்ள கவுன்சில்களைக் கலைப்பதற்கு வலியுறுத்தி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில், ‘சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சோ்ந்த குழுவைச் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். மாகாண கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் தலைவா்களுடன் விவாதித்தேன்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவா்களையும் சந்தித்துப் பேசினேன். இலங்கையில் தமிழா்கள் வசிக்கும் மாகாணங்களில் இந்திய அரசின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவா்கள் உறுதியளித்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இலங்கையில் மாகாண கவுன்சில் நடைமுறை கடந்த 1987-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அந்நாட்டில் 9 மாகாண கவுன்சில்கள் உள்ளன. ஆனால், சிங்கள பெரும்பான்மையினரைக் கொண்ட கட்சிகள், மாகாண கவுன்சில்களைக் கலைக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை இந்தியா திரும்பினாா். இந்தப் பயணத்தின்போது இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பல அமைச்சா்களையும், எதிா்க்கட்சித் தலைவா் சஜித் பிரேமதசாவையும் அவா் சந்தித்துப் பேசினாா்.